லைக்குக்காக ரிஸ்க் பயணம்
சமூக வலைதளத்தில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக புதுவிதமாக ஏதாவது செய்வதும், புதிய விஷயங்களை காட்ட வேண்டும் எண்ணத்தில் பலரும் தங்களிடம் இருக்கும் மொபைல் மற்றும் கேமராக்கள் மூலம் பல ரிஸ்க்கான பயணங்களை மேற்கொண்டு வருவார்கள். அப்படி மலை பகுதிகளின் ஓரங்களில் சென்று வீடியோ எடுப்பதாக கூறி மாயமானவர்களும் உண்டு, மலையில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டவர்களும் உண்டு.. லைக்குக்காக தங்களது உயிரை பணயம் வைக்கும் நிகழ்வு நாள் தோறும் நடந்து வந்தாலும் சிலர் தங்களை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.
தமிழக மருத்துவ மாணவர் மாயம்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரித்திக் என்ற மாணவர் ஜார்ஜியா நாட்டில் ஐந்தாம் ஆண்டு எம் பி பி எஸ் பயின்று வருகிறார். அங்கு நண்பர்களோடு ஹாஸ்டலில் தங்கி அவர் மருத்துவம் பயின்று வரும் நிலையில் வார விடுமுறை நாட்களில் தனியாக அங்குள்ள மலைகளுக்கும் காடுகளுக்கும் சென்று வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ரித்திக். அப்படி கடந்த வாரம் வீடியோ பதிவு எடுப்பதற்காக அருகில் உள்ள மலைக்கு ட்ரக்கிங் சென்றவர் இரண்டு மூன்று நாட்களாக திரும்ப வரவே இல்லை என்று அங்கிருக்கும் நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மலைக்குள் சென்றவர் மாயம்
இதனால் செங்கல்பட்டில் உள்ள பெற்றோர்கள் பதறி அடித்து அவருடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ரித்திகை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் அங்குள்ள நண்பர்கள் மூலமாக புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த நாட்டு அரசு ரித்திக்கை தீவிரமாக தேடுதல் முயற்சியில் ஈடுபடவில்லை என அங்குள்ள நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மகன் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் பிள்ளைக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என பதறிப் போய் இருக்கும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க முதலமைச்சர் தனிப்பிரிவில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
கண்டுபிடிக்க கோரிக்கை
இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளும் விசாரித்தபோது இந்த மாணவன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஈமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பதில் ஈமெயில் கிடைக்கப்பெற்றால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.