
ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் இந்தியன் ரயில்வேயை பயன்படுத்தி வருவதால் அது, நம்நாட்டின் உயிர்நாடியாக விளங்குகிறது. வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் நீண்ட தூர பயணங்களுக்கு பெயர் பெற்றவை. இருப்பினும், மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் ரயில்களும் இந்திய ரயில்வேயில் உள்ளன. 46 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 5 மணி நேரம் எடுக்கும் இந்த ரயில் சேவை எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?
நீலகிரி மலை ரயில்வேதான் இந்தியாவின் மிக மெதுவான ரயில் சேவையாகும். மேட்டுப்பாளையம் - ஊட்டி பயணிகள் ரயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் உதகமண்டலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் இது இயக்கப்படுகிறது. எனவே இது ஊட்டி பொம்மை ரயில் என்றும் அழைக்கப்படுகிறது.
மணிக்கு சுமார் 9 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது, அதாவது 46 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 5 மணி நேரம் ஆகும். நாட்டின் அதிவேக ரயில்களை விட 16 மடங்கு குறைவான வேகத்தில் இந்த ரயில் செல்கிறது. கெல்லர், குன்னூர், வெலிங்டன், லவ்டேல், ஃபெர்ன் ஹில் போன்ற அழகிய மலைவாசஸ்தலங்கள் வழியாக இந்த ரயில் பயணிக்கிறது. வேகத்தைத் தவிர்த்து, அமைதியான மற்றும் அழகிய பயண அனுபவத்தை இந்த ரயில், பயணிகளுக்கு வழங்குகிறது. இயற்கை காட்சிகளை ரசித்து மகிழும் ஒரு நிதானமான பயணம் இது.
நீலகிரி மலை ரயில் ஒரு மீட்டர் கேஜ் பாதையில் இயங்குகிறது, இது பெரும்பாலான ரயில்கள் பயன்படுத்தும் அகல கேஜை விட குறுகலானது. இந்தப் பாதையில் 16க்கும் மேற்பட்ட சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட கூர்மையான வளைவுகள் உள்ளன. இந்த அம்சங்கள் பயணத்தை சவாலானதாக மாற்றுவதால், ரயில் மிக மெதுவாகவும் கவனமாகவும் இயக்கப்படுகிறது.
நீலகிரி மலை ரயில்வே முதன்முதலில் 1854 இல் முன்மொழியப்பட்டது. மலைப்பாங்கான நிலப்பரப்பின் சவாலான சூழ்நிலைகள் காரணமாக, 1891 இல் தான் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1908 இல் பணிகள் நிறைவடைந்த இந்த ரயில், தற்போது இந்தியாவில் இயங்கும் ஒரே ரேக் ரயில்வேயாகும்.
பழங்கால நீராவி என்ஜின்கள்தான் இந்த ரயிலின் மற்றொரு சிறப்பம்சம். தெற்கு ரயில்வே இதை இயக்குகிறது. நீலகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி ஊட்டி ரயில் நிலையத்தில் முடிவடைகிறது. நீலம் மற்றும் கிரீம் நிறத்தில் உள்ள பெட்டிகள் இந்த ரயிலின் சிறப்பம்சமாகும். பெட்டிகள் பெரும்பாலும் மரத்தால் ஆனவை, பயணிகள் காட்சிகளை ரசிக்க வசதியாக பெரிய ஜன்னல்களும் உள்ளன.
இரண்டு வகையான பெட்டிகள் உள்ளன: 72 இருக்கைகள் கொண்ட முதல் வகுப்பு மற்றும் 100 இருக்கைகள் கொண்ட பொது வகுப்பு. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமீபத்தில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணியளவில் ஊட்டியை அடைகிறது. ஊட்டியில் இருந்து மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது. ஊட்டிக்கு செல்லும் போது தான் 5 மணிநேரம் ஆகும். ஆனால் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும்போது 3.30 மணிநேரத்தில் வந்துவிடலாம். ஐஆர்சிடிசி வலைத்தளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.