சேலம் மாவட்டத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற மூதாட்டி சரஸ்வதி காது, மூக்கு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நகைக்காக கொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்த நிலையில், குற்றவாளி நரேஷ் குமார் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ் மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா (45), முருகானந்தம் (43) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஜனகராஜ் இறந்து விட்ட நிலையில் சரஸ்வதி மகன்களுடன் வசித்து வந்தார். இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்துக்கு தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
23
காது, மூக்கு அறுபட்ட நிலையில் கொலை
இந்நிலையில், கடந்த 20ம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விவசாய நிலத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சரஸ்வதி பலத்த காயத்துடன் காது, மூக்கு அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளைக் கொண்டு சேலம் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருந்தனர். போலீசாரின் விசாரணையில் நரேஷ் குமார் என்பவர் மூதாட்டியை கொலை செய்தது உறுதியானது.
33
துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
இந்நிலையில் சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் குற்றவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நரேஷ் குமாரை பிடிக்கச் சென்றனர். அப்போது, நரேஷ் குமார் கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வக்குமாருக்கு காயம் ஏற்பட்டது. சரணடையுமாறு கூறியும் கேட்காததால் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். நரேஷ் குமார் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இவர் தனியாக வீட்டில் இருக்கும் மூதாட்டிகளையும், ஆடு மாடு மேய்க்கும் வயதான பெண்களையும் குறிவைத்து கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.