Published : Sep 27, 2024, 07:55 AM ISTUpdated : Sep 27, 2024, 09:42 AM IST
School Education Department: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 7ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதாவது
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் 4, 5 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டித்தால் போதும் சனி, ஞாயிறுடன் சேர்த்து 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், காலாண்டுத் தேர்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டியுள்ளது என தெரிவித்திருந்தனர்.
35
School Holiday Extended
இதுதொடர்பாக ஆசிரியர்களின் கோரிக்கை துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இதனையடுத்து ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அக்டோபர் 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 395 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களின் போது பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை கண்டிப்புடன் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.