Nellai Court
கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி நெல்லை நீதிமன்ற வளாகத்தில் 7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை கண்டு பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Chennai High Court
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை எடுத்துக்கொண்டது. இந்த கொலை சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறது என்றால் சாட்சிகள் எப்படி துணிச்சலாக சாட்சியம் அளிக்க முன்வருவர். காவல்துறையினர் பணி நேரத்திலும்கூட செல்போனில் தான் அதிகமாக மூழ்கி கிடக்கின்றனர்.
chennai police
இந்த கொலை சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்து தவறிழைத்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நெல்லை காவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை இடைக்காலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் தேவையான ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DGP Shankar Jiwal
இந்நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சமீபத்தில் நெல்லை நீதிமன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் எஸ்.ஐ மற்றும் மற்றொரு காவல்துறை அதிகாரி ஆகியோர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே உள்ள பாதுகாப்புடன் கூடுதலாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. காவலர்கள் பிஸ்டல் உடன் நீண்ட தூரம் சுடும் துப்பாக்கிகள் ஆகியவை இரண்டையும் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்பிற்காக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.