Edappadi Palanisamy
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மதியத்திற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எனக்கூறினார்.
MK Stalin
மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி ஆட்சி இருக்கும் போதுதான் இது கொண்டு வரப்பட்டது. அதேபோல் இனி I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதை அறிந்தே வாக்குறுதி கொடுத்தீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். மீண்டும் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக உடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்து இருப்பதாக பேசினார்.
Vijay
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் என விஜய் விமர்சனம் செய்துள்ளனர்.
TVK Vijay
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
DMK Government
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என விஜய் காட்டமாக தெரிவித்துள்ளார்.