ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன.
evks elangovan
இதனிடையே ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு (திருமகன், இளங்கோவன்) வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஈரோடு தொகுதியில் திமுக போட்டியிடும். காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை முழுமையாக திமுகவுக்கு அளிக்கும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கைபரப்பு இணைச்செயலாளர் விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக விசி சந்திரகுமார் தேமுதிக.வில் விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக இருந்தவர். பின்னர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி திமுக.வில் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.