அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். தொகுதி பங்கீடு குறித்தும், ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
25
அதிமுக பொதுக்குழு தீர்மானம்
இதற்கிடையே நேற்று அதிமுக பொதுக்குழு நடந்த நிலையில், அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும். கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியே முடிவு செய்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கினாலும் எடப்பாடியை கன்ட்ரோல் செய்வதே அமித்ஷா தான். அவர் சொல்வதை தான் இபிஎஸ் கேட்க வேண்டும் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.
35
இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழக பாஜக துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம்? உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பாஜகவை பொறுத்தவரை இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சிக்க்குள் கொண்டு வர பாஜக விரும்புகிறது. ஆனால் அது முடியவே முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக உள்ளார். இது தொடர்பாகவும் நயினார் இபிஎஸ்ஸுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
55
இறுதி முடிவு எடுக்கும் அமித்ஷா
இந்த பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி கூறும் விவரங்களை நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவிடம் கூற இருக்கிறார். அதன்பிறகு தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து அமித்ஷாவும், பாஜக தலைமையும் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் நெருக்கடிக்கு இபிஎஸ் அடிபணிவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.