தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. நாகை மாவட்ட பாஜக நிர்வாகி, அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்துள்ளார். இது 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக அரசின் செயல்பாடுகளை பாஜகவும், மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிராக திமுகவும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தேர்தலை பாஜக எதிர்கொண்டது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை அதிமுக திமுகவிடம் இழந்தது. பாஜகவும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
24
அதிமுக- பாஜக கூட்டணி.?
இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு எளிதாக அமைந்தது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது.
34
பாஜகவில் மாவட்ட தலைவர்கள் மாற்றம்
இதற்காக செயல்படாத மாவட்ட தலைவர்களை மாற்றி அமைத்து வருகிறது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த மாவட்ட தலைவர்கள் அதிரடியாக கட்சி மாறி வருகிறார்கள். இந்த நிலையில் நாகை மாவட்ட தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திமுகவில் இணைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தவர் கார்த்திகேயன், இவரது மகன் திருசுகன் பாஜக தொழில்துறை பிரிவில் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார்.
44
திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் கார்த்திகேயன் உயிரிழந்தார். இதனையடுத்து நாகை மாவட்ட பாஜக தலைவர் பதவிக்காக திருசுகன் முயற்சி செய்தார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவராக விஜேந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த திருசுகன் கடந்த சில வாரங்களாக கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்தவர் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலையில் திருசுகன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.