Mettur Dam
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் காவிரி ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
Mettur Dam Water Level
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென வேகமாக உயர்ந்து வந்தது. அணைக்கு நேற்றிரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 81,552 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 93,828 கன அடியாக உயர்ந்தது. காலை 9 மணியளவில் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை எட்டியது.
Mettur Dam Reaches 100 Feet
அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 95.50 அடியாக இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணியளவில் 100 அடியை எட்டியது. இதனையடுத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்களை தூவி காவிரி நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
Salem Mettur Dam
கடந்தாண்டு ஜூலை 17ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அதன் பின்னர் 405 நாட்களுக்குப் பின்னர் இன்று 100 அடியை எட்டியுள்ளது. அணை வரலாற்றில் 71வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் ஒரு வாரத்திற்குள் அணை முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் டெல்டா பாசன விவசாயிகள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 4ம் தேதி வரை 39.67 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.