Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய கட்டுப்பாடுகள்? இனி இவர்களுக்கு கிடைக்காது? முழு விவரம்!

Published : May 14, 2026, 03:07 PM IST

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்பு செய்யப்படும் என விஜய்யின் தவெக அரசு தெரிவித்துள்ளது. இனி யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் கடந்த திமுக அரசு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வந்தது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை தகுதியான பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 வழங்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது. இதேபோல் நடிகர் விஜய்யின் தவெக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். தவெக தேர்தலுக்கு முன்பாக அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வரும்? என பொதுமக்கள் காத்துக் கிடந்தனர். இந்த நிலையில் மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

24
மே மாத மகளிர் உரிமைத் தொகை எப்போது?

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

34
சீரமைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. அதே வேளையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற முக்கியமான விஷயத்தை தமிழக அரசு சொல்லியுள்ளது. அதாவது கடந்த திமுக ஆட்சியில் தகுதியான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தாலும், சில தகுதியில்லாத பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர் என்பதே உண்மை. உதாரணத்துக்கு பல வீடுகள் கட்டியும், பல வீடுகளை வாடகைக்கு விட்டும் அதிக சொத்துகளும் வைத்திருந்த சில குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

பணக்கார பெண்களுக்கும் உரிமைத்தொகை ஏன்?

குடும்பத் தலைவிகள் என்ற பெயரில் அதிக சொத்துகளை வைத்திருக்கும் பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் பணக்காரர்களாக இருந்தாலும் திமுக கட்சி செல்வாக்கை வைத்து மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. அதே வேளையில் சில பெண்கள் மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவதாக கூறி அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்பட்டு வந்தது. 

சில பெண்கள் கணவர்கள் இறந்த பிறகு அவர்களின் சொற்ப வருமானத்தை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடும் இல்லை. ஆனாலும் ஓய்வூதியம் என்பதை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக சொந்த வீடு இல்லாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என சேர்க்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

44
சொந்த வீடு இல்லாதவர்களும் சேர்க்கப்பட வேண்டும்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என தவெக அரசு கூறியுள்ளதால் இவையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது. அதாவது செல்வ செழிப்புடன் வாழும் பணக்கார குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகையில் இருந்து விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

அதே வேளையில் ஏழைகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகையில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகுதியும் சேர்க்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்?

மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500 என்பது அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே தகுதியில்லாதவர்களை கழட்டி விட்டு, தகுதியானவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories