Madurai 144 Order : திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை.. மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு

Published : Nov 24, 2026, 07:47 AM IST

Madurai 144 Order : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PREV
18
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகப் போற்றப்படும் மதுரை திருப்பரங்குன்றத்தில், இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபத் திருநாள், இந்த முறை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவு, அதற்கு தமிழக அரசின் எதிர்ப்பு, இரு தரப்பினரின் கருத்து வேறுபாடு எனப் பல்வேறு காரணங்களால் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் திரளக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது? திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் என்ன பிரச்சினை? உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவிட்டது? பக்தர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

28
மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாக சட்டரீதியான சர்ச்சை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் அமைப்புகளும், அங்கு தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினரும் உள்ளனர்.

இந்தச் சூழலில், நவம்பர் 24 தேதியான இன்று திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு நேற்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

38
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

இருப்பினும், திருக்கார்த்திகை நாளையொட்டி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வரக்கூடும் என்பதால் மோதல், போராட்டம், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) 144-வது பிரிவாக அறியப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, நேற்று (நவம்பர் 23) ஆம் தேதி இரவு 9 மணி முதல் நாளை (நவம்பர் 25) ஆம் தேதி காலை 10 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் அனுமதியின்றி பொதுமக்கள் ஒன்றுகூடுவது, போராட்டம் நடத்துவது, ஊர்வலம் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

48
கட்டுப்பாடுகள் என்ன?

பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,

  • மதுரை மாவட்ட எல்லைக்குள் அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது.
  • ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தக்கூடாது.
  • பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அனுமதியின்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.
  • திருப்பரங்குன்றம் மலை மீது பொதுமக்கள் ஏறிச் செல்ல அனுமதி இல்லை.
  • பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது.


144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியமான குடும்ப நிகழ்வுகள், மத வழிபாடுகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

58
போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தீபத்தூண் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால், எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மதுரை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த போலீஸாருடன் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காவலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

68
தீபத்தூண் விவகாரம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மலைப்பகுதியில், தர்காவுக்கு அருகே ஒரு கல் தூண் அமைந்துள்ளது. இந்தத் தூணைத் தீபத்தூண் என்று குறிப்பிட்டு, அங்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மறுபுறம், அங்கு தீபம் ஏற்றுவதற்கான பாரம்பரிய வழக்கம் இல்லை என்றும், ஆகம விதிகளின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில்தான் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படுகிறது என்றும் எதிர்தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி அளித்த உத்தரவும், பின்னர் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாக அமைந்தன.

இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

78
உச்ச நீதிமன்ற உத்தரவு

உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவிட்டது?

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த அனுமதி சில முக்கியமான நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனைகள்

1. கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும்.

2. குழுவில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

3. பொதுமக்கள் தீபத்தூண் அமைந்துள்ள இடத்திற்குச் செல்ல அனுமதி கிடையாது.

4. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது ஊர்வலம், பொதுமக்கள் கூட்டம், முழக்கங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

5. தீபம் ஏற்றப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.

6. மலைப்பகுதியில் புதிய கட்டுமானங்கள், அகழ்வுப் பணிகள் அல்லது நிரந்தர மாற்றங்கள் செய்யக்கூடாது.

7. தர்கா மற்றும் மசூதியின் வழக்கமான செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.

8. நிகழ்வு முடிந்த மூன்று நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் செயல்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

88
உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்தது என்ன?

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு அதனை மறுபரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால், ந்நேற்று வரை இந்தச் சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories