'தீபத்தூண் இல்லை, சர்வே கல்தான்'... ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசு!

Published : Nov 23, 2026, 06:42 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை (நவ. 24) கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ள நிலையில், அப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PREV
15
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம்: உச்சக்கட்ட பாதுகாப்பு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மற்றும் தூண் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளது.

25
வழக்கின் பின்னணியும் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை அனுமதியும்

கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி, கடந்த ஆண்டு இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையை நேரில் ஆய்வு செய்த பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். பின்னர், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் இந்த உத்தரவை உறுதி செய்தது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மலை உச்சியில் உள்ள தூண் நில அளவைக் கல் (சர்வே கல்) என்றும், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றம் செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த்குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு, கடந்த 20-ஆம் தேதி முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், நாளை செவ்வாய்க்கிழமை (நவ. 24) கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை மட்டும் கடும் நிபந்தனைகளுடன் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர். கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் செல்லவும், ஊர்வலம் மற்றும் கோஷம் எழுப்பவும் தடை விதித்ததோடு, இது குறித்த அறிக்கையை மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.

35
'தீபத்தூண் இல்லை, சர்வே கல்தான்' – தமிழக அரசு சீராய்வு மனு

இத்தீர்ப்பை இந்து அமைப்புகள் வரவேற்ற நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.விஜய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், தர்காவுக்கு அருகில் இருப்பது தீபத்தூண் இல்லை, அது நில அளவைக் கல் (சர்வே கல்) எனத் தெரிவித்து ஆதாரங்களுடன் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவில், முதற்கட்ட ஆய்வில் மாநிலத்தில் கண்டறியப்பட்ட 800 நில அளவை நிலையங்களில், சிக்கந்தர் மலை உட்பட 484 இடங்களில் நேரில் ஆய்வு நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை 450 நில அளவைக் கற்கள் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, சீராய்வு மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் பஞ்சோலி அமர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) அலுவல் இல்லை என்பதால் அம்மனு விசாரணைக்கு வரவில்லை. இடைக்கால உத்தரவு வழங்கிய நீதிபதிகளின் முன்புதான் சீராய்வு மனுவை முறையிடுவது மரபு என்பதால், தலைமை நீதிபதி அமர்விலும் முறையிடப்படவில்லை. மேலும், நாளை குருநானக் ஜெயந்தி காரணமாக உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால், நாளையும் தமிழக அரசின் சீராய்வு மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

45
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை & நவீன கேமரா மூலம் கண்காணிப்பு

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மலை உச்சியில் உள்ள தூண், உச்சிப் பிள்ளையார் கோயில், நெல்லித்தோப்பு மற்றும் மலைப் படிக்கட்டுப் பாதைகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டை விடக் கூடுதலாக 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களும், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அதிநவீன 'முகத்தைக் கண்டறியும் கேமராக்களும்' (Face Recognition Cameras) பொருத்தப்படுகின்றன. மலை அடிவாரம் முதல் உச்சி வரை 200-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; கோயில் நிர்வாக அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

55
ஆர்ப்பாட்டம், பேரணிக்குத் தடை & 'சிவப்பு மண்டலம்' அறிவிப்பு

இச்சூழலில், இன்று மாலை மதுரையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணியும், மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், தடையை மீறி அமைதிப் பேரணி நடைபெறும் எனத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு இன்றும் நாளையும் திருப்பரங்குன்றம் மலை & சுற்றுவட்டார பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே நாளை (நவ. 24) மலை உச்சித் தூணில் தீபம் ஏற்றப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories