'ரூ.680 கோடி மக்கள் பணம் செலவு; பாதியில் எப்படி கைவிட முடியும்?' - பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Published : Nov 21, 2026, 08:10 AM IST

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காக ரூ.680 கோடி அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை எவ்வாறு பாதியில் கைவிட முடியும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

PREV
14
பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை பாதியில் கைவிடுவது ஏன்? -ஐகோர்ட்

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காக அரசுப் பணம் ரூ.680 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை எவ்வாறு பாதியில் கைவிட முடியும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கௌதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு நிலவும் இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக ரூ.27,000 கோடி மதிப்பீட்டில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூ.680 கோடி அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு, 48% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் கடந்த ஆக.24-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.

24
நிபுணர் குழு அறிக்கை, பொருளாதார ஆய்வு இல்லாமல் கைவிடப்பட்ட திட்டம்

கடந்த 2023-ம் ஆண்டு, 2,325 ஹெக்டேர் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 1,527 ஹெக்டேர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அனுமதி வழங்கியதுடன், 798 ஹெக்டேர் நிலங்கள் வகைமாற்றம் செய்யப்பட்டன. ஆனால், எந்தவிதமான தொழில்நுட்பப் புள்ளிவிவரங்களோ, நிபுணர் குழுவின் அறிக்கைகளோ, பொருளாதார ஆய்வுகளோ இல்லாமல் இத்திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

எனவே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும். மேலும், திட்டத்தைக் கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

34
உயர்நீதிமன்றத்தில் காரசார வாதம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இத்திட்டத்திற்காக ஏற்கெனவே 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ.680 கோடி அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தைக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் குறுக்கிட்டு, அரசுப் பணம் ரூ.680 கோடி செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், பாதியில் இத்திட்டத்தை எப்படி கைவிட முடியும்? தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது எப்படி அந்தப் பகுதி சாத்தியமில்லாதது எனக் கூற முடியும்? எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

44
அரசுத் தரப்பு விளக்கம் மற்றும் உத்தரவு

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர், விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் & விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது மிகவும் சிக்கலானது. தவறான முடிவுகள் திருத்தப்பட வேண்டும். விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

இது தொடர்பான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; விரைவில் அரசாணை வெளியிடப்படும். எனவே, இந்த மனுவுக்குப் பதிலளிக்கக் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories