
பெண்களுக்கு பொருளாதார ரீதியாக சுதந்திரம் அளிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன. சிறு சேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ, வருமானம் ஈட்டவோ இந்த சுய உதவிக்குழுவின் மூலம் வாய்ப்பு பெறுகின்றனர்.
கிராமப்புறங்களில் வறுமையில் வாழும் பெண்களுக்கு சிறு கடன்கள் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை குறைக்க உதவுகின்றன. இது மட்டுமில்லாமல் பெண்களுக்கு பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்க உதவுகின்றன.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் இருந்து சுழல்நிதி கடன், பொருளாதார கடன் மற்றும் தொழில் கடன்களைப் பெறுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 1,014 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2,028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டன.
குறைந்தபட்சம் 6 மாதங்கள் செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனைகளை பெறலாம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வங்கிக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்குகிறது. கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் குழுக்கள் இதற்கு தகுதி பெறுகின்றனர்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மத்திய அரசு ரூ.1261 கோடி மதிப்பில் 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ட்ரோன் மற்றும் உபகரணங்களின் செலவில் 80% அதாவது அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ட்ரோன் பயிற்சி மூலம் விவசாயி நிலங்களில் பூச்சு கொல்லி மருந்து தெளிக்க அதிகளவு பயன்படுத்தி கொள்கின்றனர். இதனால் மகளிர் வருமானத்தை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே ட்ரோன் பயன்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக்குழுவிற்கு 15 நாட்கள் பைலட் பயிற்சி மற்றும் 10 நாட்கள் வேளாண் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்ய ஆதரவு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் நிதி ஆதரவை கடன் சேவைகள் வழியாக மேலும் பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ், கடந்த 4 ஆண்டு காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10,997.07 கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்கள் சொந்த முயற்சிகளின் மூலம் தொழில்கள் தொடங்கவும், தொழில் வளர்ச்சி மேற்கொள்வதற்கும், குடும்ப வருமானத்தை உயர்த்தவும் இக்கடன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம், நிதிநிலை பாதிக்கப்பட்ட மகளிர் குடும்பங்களுக்கு பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.
மேலும், இந்த திட்டத்தின் ஒரு முக்கிய முன்னேற்றமாக, சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உச்ச வரம்பு ரூ. 20 இலட்சத்தில் இருந்து ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குழுக்களின் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. அந்த வகையில் தொடக்கத்தில் 20 லட்சம் வரம்புக்கு மட்டும்தான் உதவி பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 லட்சம் வரம்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு முறைப்படி கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை–கோட்டூரில் உள்ள 15 மகளிர் சுய உதவிகுழுவுக்கும் 30 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், பெண்கள் சமூக-பொருளாதார மேம்பாட்டில் முக்கிய இடத்தை பிடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புற மகளிரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகும்.