கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து இதே வழியாக கொல்லத்துக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கொல்லத்துக்கு தென்காசி, புனலூர் வழியாக இயக்கப்படும் ஒரே ரயில் இது என்பதால் பயணிகள் மத்தியில் எப்போதும் கிராக்கி அதிகம். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து 5.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
25
கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்
இதேபோல் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் இப்போது எழும்பூரில் பணிகள் நடப்பதால் சில மாதங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16102) வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கே வந்து விடுவதால் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேருந்து, புறநகர் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் 2.30 மணிக்கே தாம்பரம் வந்து விடுவதால் தூக்கம் கெட்டு விடுவதாகவும் கொல்லத்தில் இருந்து தாமதமாக புறப்பட்டு தாம்பரத்துக்கு 5 மணிக்கு மேல் வந்து சேரும் வகையில் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
55
தென்காசி மக்களுக்கு நற்செய்தி
கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு (கொல்லம் தாம்பரம்), மதியம் 12.10 மணிக்கு (குருவாயூர் மதுரை) என 2 ரயில்கள் தென்காசிக்கு அடுத்தடுத்து புறப்பட்டன. இதையடுத்து இரவு 11.10 மணிக்கு தான் தென்காசிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இருந்தது. மாலையில் தென்காசிக்கு ரயில் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டது கொல்லத்தில் இருந்து தென்காசி, ராஜபாளையம் மக்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.