கீழடி அகழ்வைப்பகம் விரைவில் திறக்கப்படலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடி அகழ்வைப்பகத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த கட்டங்கள், தொல்பொருட்கள் ஆகியவை, தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளது என்பதே உண்மையாகும்.
கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாக்கும் வகையில், கீழடி அருகே உள்ள கொந்தகையில் அகழ்வைப்பகத்திற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 11 கோடி 3 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி, 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கிறது.
கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான தரவுகள் கிடைத்திருக்கின்றன.
நகரம் சார்ந்த வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளதற்கான சாட்சியமாகக் கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன.
தொழிற்கூடங்கள், சாயப் பட்டறைகள், வணிக வளாகங்கள் மற்றும் பல செங்கல் தொழிற்சாலைகள் ஆகியன அடங்கிய மேம்படுத்தப்பட்ட நகரமாகக் கீழடி இருந்துள்ளதைக் காண முடிகிறது.
வைகை நாகரீகத்தை உயர்ந்ததாக உலகுக்குக் கூறும் கீழடியில் பலவகை மணிக்கற்கள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.
அகழாய்வில் கட்டடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைப்பது அரிது. ஆனால் சங்க காலத்திலேயே செங்கல் கட்டடங்கள் இருந்துள்ளன என்பதை கீழடி ஆய்வு எடுத்துரைத்துள்ளது.
மதுரை நகரிலிருந்து தென்கிழக்கு திசையில் 13 கி.மீ தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து வடக்கில் இரண்டு கி.மீ தூரத்தில் வைகை நதி ஓடுகிறது.
கீழடி அகழாய்வுகளில் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களோடு அன்றைய பயன்பாட்டில் இருந்த இரும்பிலான வாள், கொக்கி, ஆணிகள், கத்திகளின் பாகங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காண இயலாத இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.