
தமிழகத்தில் பழ.கருப்பையாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பல அடையாளங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது பல யூடியூப் பேட்டிகளிலும் கலந்து கொண்டு பேட்டி கொடுத்து வருகிறார். ‘காந்திய மக்கள் இயக்கம்’ என்கிற ஒரு கட்சியைத் துவங்கி அதை நடத்தியும் வருகிறார். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பழ.கருப்பையா பின்னர் ஜனதா கட்சி, ஜனதா தளம், திமுக, மதிமுக, அதிமுக, மீண்டும் திமுக, மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
2011-ம் ஆண்டில் அதிமுக சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் ஜெயலலிதாவை தாக்கி பேசியதன் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தன்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்த அவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக திமுகவிலிருந்து விலகி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். பின்னர் அங்கிருந்தும் விலகி தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னை சாதிய ரீதியாக கொடுமைப்படுத்துவதாக அவரது தம்பி மகன் கரு.பழனியப்பன் போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை டி.எஸ்.பி பார்த்திபனிடம் கரு.பழனியப்பன் அளித்துள்ள புகாரில், “தனது தந்தையின் மூத்த சகோதரரான பழ.கருப்பையா, 2004-ல் நான் காதல் திருமணம் செய்வதற்கு முன்பு என்னை அழைத்து வேறு சமூகத்தில் திருமணம் செய்யக்கூடாது என வற்புறுத்தினார். மீறி திருமணம் செய்தால் குடும்பம் மற்றும் சுற்றத்தாரிடமிருந்து தனிமைப்படுத்தி விடுவதாக மிரட்டினார். என் வீட்டின் சம்மதம் இருந்ததனால் காதல் திருமணம் செய்து கொண்டேன். கடந்த 21 வருடமாக என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களில் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கக்கூடாது என நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
மாற்று சாதியில் திருமணம் செய்த என்னை தனிமைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். 21 ஆண்டுகளாக என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் சாதிய வன்கொடுமையை இன்று வரை தொடர்ச்சியாக பல விதங்களில், பல நிகழ்வுகளில் செய்து வருகிறார். வருகிற 29-ம் தேதி கண்டரமாணிக்கத்தில் நடக்கவுள்ள சதாபிஷேக விழாவிற்கு என்னை அழைக்கக்கூடாது என விழா நடத்துபவர்களுக்கு பழ.கருப்பையா அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும் காரைக்குடி பூர்வீக வீட்டில் ஐந்தில் மூன்று பங்கு வைத்திருக்கும் என்னை அடிப்படை வசதிகளை செய்து கொள்வதற்கும், சேதமடைந்த பகுதிகளை மராமத்து செய்ய விடாமல் தடுத்து பழ.கருப்பையா இன்னல்களை கொடுத்து வருகிறார்.
பழ.கருப்பையாவின் சாதிய வன்கொடுமையிலிருந்து தடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அதனை மீறி தொந்தரவு கொடுத்தால் அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கரு.பழனியப்பன் அந்த மனுவில் கூறியுள்ளார். சமூக நீதி குறித்தும், சாதி மறுப்பு குறித்தும், காந்திய சிந்தனைகள் குறித்தும் பெரியாரிய கருத்துக்கள் குறித்தும் பேட்டிகளில் வாய் கிழிய பேசும் பழ.கருப்பையா தனது சொந்த தம்பி மகனுக்கே சாதிய வன்கொடுமை செய்து வருகிறாரா? சாதி மறுப்பு உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? தன் குடும்பத்திற்கு வந்து விட்டால் பழ.கருப்பையா அதை ஏற்க மாட்டாரா? என தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.