ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷ்க்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் பைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் ஆண்கள் அணியில் இடம்பெற்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக விளையாடினார்.
24
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்
இந்த நிலையில், தங்கம் வென்ற இருவரும் இன்று சென்னை திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆனையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சென்று சந்தித்தனர். அப்போது இருவரையும் பாரட்டிய முதல்வர், இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார்.
34
ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ''பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
கண்ணகி நகர் முன்னேற்றம்
கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.
கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது'' என்றார்.