கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வழங்கினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் திங்கள் கிழமை சம்பவம் நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற கமல் கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
24
ரவுண்டானாவில் அனுமதி மறுக்கப்பட்டது நல்லது
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசம்பாவிதம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதுபற்றி அதிகம் பேசக் கூடாது. நான் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளேன். இது யாரையும் பாராட்ட வேண்டிய நேரமில்லை. மேலும் தவெக.வினர் கோரிய ரவுண்டானா பகுதியில் அனுமதி வழங்காதது சரியான முடிவு. அங்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இதைவிட பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இனி இதுபோல் சம்பவம் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
34
ஒரு தலைமை எப்படி செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் காட்டி உள்ளார்
தமிழக முதல்வர் மிகவும் பண்புள்ள அரசியல்வாதி. ஒரு தலைமை எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர் காட்டி உள்ளார். அதற்காக நன்றி. மேலும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து உதவிகளை செய்துள்ளனர். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் இன்னும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும். மேலும் செந்தில் பாலாஜி இதே பகுதியைச் சேர்ந்தவர். அவர் வராமல் வேறு யார் வருவார்கள்?
இச்சம்பவம் தொடர்பாக அதிகமான வீடியோகள் வருகின்றன. எது உண்மை என ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையை சரியாக செய்துள்ளது. அவர்களை குறை சொல்ல வேண்டாம். விஜய்க்கு தேவையான அறிவுரையை நீதிமன்றம் வழங்கும் என்று தெரிவித்தார்.