magalir urimai thogai
திமுக அரசின் தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதனையடுத்து அடுத்த 10 வருடங்கள் ஆட்சி பிடிக்க முடியாதபடி அதிமுக அரசு தனது முத்திரையை பதித்திருந்தது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு வாழ்வா.? சாவா.? என்ற நிலை ஏற்பட்டது. அப்போது திமுகவின் புதிய தேர்தல் அறிவிப்பு தான் மகளிர் உரிமை தொகை,
இது போன்று பேருந்தில் இலவச பயண திட்டமான விடியல் திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற நிலையில் தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியையும் பிடித்தது. இதில் மகளிர் உரிமை தொகை அறிவிப்பு தான் சூப்பர் ஹீரோவாக பார்க்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை திட்டம்
இதனையடுத்து ஆட்சியில் அமர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தினார். இதனையடுத்து மக்கள் ஆர்வமோடு எதிர்பார்த்த மகளிர் உரிமை தொகை திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது.? யாருக்கெல்லாம் வழங்குவது என திட்டமிடப்பட்டது. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக கடந்த ஆண்டு மகளிர் உரிமை தொகை தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் படி பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3 ஆயிரத்து 600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
magalir urimai thogai
ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு உதவி தொகை
இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இருந்த போதும் 1.63 கோடி குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்து இருந்தனர். இதில் பல கட்ட ஆய்வுக்கு பிறகு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 55 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டு தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன் அடைந்து வருகின்றனர்.
அமைச்சரவை கூட்டம்
இந்தநிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகப்பட்ட நிலையில் அந்த மக்களும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக எப்போது அறிவிப்பு வரும் என காத்துள்ளனர். அந்த வகையில், வருகிற அக்டோபர் 8ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி பங்கேற்கவுள்ளார். எனவே இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிபந்தனைகள் தளர்வு- 8 லட்சம் பேருக்கு வாய்ப்பு
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருப்பதால் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே 2.50 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை சற்று அதிகரித்து 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பெறுபவர்களும் மகளிர் உரிமை தொகை பெறலாம் என கட்டுப்பாடு தளர்த்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் மின்சார யூனிட் அளவும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் சுமார் 8 லட்சம் பெண்கள் கூடுதலாக மகளிர் உரிமை தொகை பெற வாய்ப்பு ஏற்பட இருப்பதாக தலைமை செயலகத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.