தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

First Published | Sep 29, 2024, 12:27 PM IST

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக 30 முக்கிய உத்தரவுகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனே செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

school student

பள்ளிகளுக்கு 30 உத்தரவுகள்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பள்ளி மற்றும் மாணவர்கள் பாதுகாப்பிற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு  வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.  அதில், .

1. மாணாக்கர்களின் பாதுகாப்பு பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.  திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடிவது, குழிகளை நிரப்புவது, மாணவர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட வேண்டும். 

2. பேரிடர்காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பள்ளிகளில் தங்க வைக்க பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளர் முழு விவரங்களை அப்பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும்.
 

school student

பழைய கட்டிடங்களை இடிக்கலாம்

3. பள்ளிகளில் உள்ள மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. பள்ளி வகுப்புகள் உள்ள இடத்தில் பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.

5. பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யா கூடாதவை குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

6. பள்ளி விடுமுறை காலங்களில் பள்ளிக் கட்டிடங்களை குறிப்பாக மேற்கூரையினை தூய்மையாக பராமரிக்க 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் உதவியுடன் தேவையான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் உரிய தரைத்தளம் சரியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்துள்ளதை ஆய்வு செய்து புதிய பராமரித்தலுக்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பராமரிப்பு நிதியினை இதற்கென பயன்படுத்தலாம்.

7. இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இடிப்பதற்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிறிய கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


school student

ஏரி, குளங்களில் குளிக்க கூடாது

8. பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

9. ஏரி,குளம் மற்றும் ஆறுகளில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

10. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு தலைமையாசிரியர்கள் அறிவுரைகள் வழங்கிட  வேண்டும். 

11 கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் தலைமையாசிரியர் வழங்கிட வேண்டும்

12. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.

13. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும். 

வகுப்பறைகளை பூட்டி வைக்க வேண்டும்

14. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

15. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைத்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும். 

16. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும். தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. .

17. மின் மோட்டார்கள் அமைத்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பெற்றோர்களுக்கு அறிவுரை

18. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள் திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளதா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

19. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

20. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

இடி, மின்னல் எச்சரிக்கை

21. மழைக்காலங்களில் இடி மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

21 மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

23. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடடியாக மின்வாரியத்தி துணையுடன் அகற்றப்படவேண்டும்.

24 சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

rain school

நோய் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

25. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

26 பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையா அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்

27. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.
 

Heavy rain school leavev

புயல் பாதிப்பு

28. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

29 மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.

30. கடலோர பகுதிகள் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான  உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!