
மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த பல்கலைக்கழக வளாகத்தில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த மாணவி, சக மாணவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மாணவியை வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான், பாமகவின் அன்புமணி, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் கொடூர செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.
காவல்துறை துரித நடவடிக்கை
அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது'' என்று கூறியுள்ள அண்ணாமலை கைதான ஞானசேகரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அண்ணாமலையின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. கைதானவருக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த குற்ற வழக்கில் யார் கைது செய்யப்பட்டாலும் அவரை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசுவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார்'' என்றார்.
குற்றவாளிக்கு மாவுக்கட்டு
இந்நிலையில், குற்றவாளி ஞானசேகரனின் பகீர் பின்னணி போலீசாரையே அதிர வைத்துள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழக காவலாளிகள் தெரிந்தவர்கள் என்பதால் அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் ஞானசேகரன் இதேபோல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. ஒருபக்கம் பிரியாணி கடை நடத்தி வந்த இவர் மறுபக்கம் அப்பாவியாக இருந்து கொண்டு இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற ஞானசேகரன் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் சுய உதவி குழுவிற்கு அடித்தது ஜாக்பாட்.! நாளை முதல் சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு