மும்பையில் இருந்து தாய்லாந்து சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 182 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கழிவறையில் அதிர பயங்கர வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார்.
24
வெடிகுண்டு மிரட்டல்
இதனையடுத்து மும்பை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக இண்டிகோ விமானத்தின் விமானியை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டலை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி விமானத்தை அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என பயணிகளும் பதற்றம் அடைந்தனர்.
34
விமானத்தில் பயணிகள் வெளியேற்றம்
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், அந்த விமானத்தில் சோதனை நடத்தினர். விமானத்துக்குள் சந்தேகப்படும் படியான பொருட்கள் ஏதும் இல்லாததால் புரளி என்பது தெரியவந்தது.
பின்னர் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.