திருச்செந்தூர் கோயிலில் கம்மியான கட்டணத்தில் ரூம்கள் திறந்தாச்சு.!ரொம்ப ஈசியா புக் செய்யலாம்-எப்படி தெரியுமா.?

First Published | Oct 15, 2024, 8:28 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. 500 பக்தர்கள் தங்கும் வசதியுடன் கூடிய இந்த விடுதியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், கூடுதல் படுக்கை அறைகள், குடும்ப விடுதிகள் மற்றும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.

tiruchendur temple

தமிழகத்தில் கோயில்கள்

தமிழகத்தில்  லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த அளவிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் சென்னையில் பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் என பல பிரசித்த பெற்ற கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் தரசினத்திற்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி மறுநாள் காலை சிறப்பு தரிசனம் மேற்கொள்ள விரும்புவார்கள்.

tiruchendur

கோயில்களில் தங்கும் விடுதிகள்

அந்த வகையில் கோயில் பகுதியை சுற்றியுள்ள தனியார் ஓட்டல்களில் தங்குவார்கள். ஆனால் அங்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படும். இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிக கட்டணம் கொடுத்து தங்க முடியாத நிலை உள்ளது. எனவே ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் என பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இதே போல திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

Tap to resize

tiruchendur temple room

திருச்செந்தூர் கோயில் விடுதி- என்ன வசதிகள்

ஆனால் இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக தங்கும் விடுதி கட்டுவது தாமதப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி நேற்று முடிவடைந்தது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 (Double Bed Rooms), 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages),

tiruchendur temple open function

கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

சமையல் அறையுடன் கூடிய உணவகம். ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது.

2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய  டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

tiruchendur temple room

முன்பதிவு செய்வது எப்படி.?

திருச்செந்தூர் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள்  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயிலின்  அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. 

Latest Videos

click me!