சென்னை பிராட்வே பி.ஆர்.என் கார்டன் காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கேட்ட கேள்விக்கு ரவுடியாவேன் என்று கூறி அதிர்ச்சியடைய செய்தார். 9-ம் வகுப்பு வரை படித்த இவர் அப்பகுதியில் அடிதடி உள்ளிட்ட சின்ன சின்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். காக்கா தோப்பு பகுதியில் 1990-களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் யுவராஜ் மற்றும் இன்பராஜ் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட தொடங்கினர்.
மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவைக் கொலை செய்ய யுவராஜ், இன்பராஜ், பாலாஜி ஆகியோர் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தனர். இதுதான் பாலாஜி மீது பதிவான முதல் கொலை வழக்காகும். இதனையடுத்து நாளாக நாளாக யார் பெரிய ரவுடி போட்டி பாலாஜிக்கும் யுவராஜிக்கும் இடையே ஏற்பட்டது. இந்த போட்டியில் இறுதியில் யுவராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு பாலாஜியின் பெயரோடு காக்கா தோப்பு அடைமொழியானது.
கொலை சம்பவங்களில் முக்கியமானது பில்லா சுரேஷ் கொலை. வடசென்னையை சேர்ந்த பில்லா சுரேஷ் என்பவரை சினிமா பாணியில் அவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி அவரின் மனைவி கண் முன்னரே காக்கா தோப்பு பாலாஜி கொலை செய்தார். பின்னர் அடுத்த அரை மணிநேரத்தில் ரவுடி விஜி என்பவரும் பாலாஜியால் கொலை செய்யப்பட்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த பாலுவுக்கும் காக்கா தோப்பு பாலாஜி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு பாலுவின் தம்பியான சதீஷ் கொலை செய்யப்பட்டார்.
ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்த காக்கா தோப்பு பாலாஜி செம்மரக் கடத்தலிலும் ஈடுபடத் தொடங்கினார்.
பின்னர் 2017-ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தனது கூட்டாளிகளுடன் டிடிவி. தினகரனுக்கு பிரசாரம் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து 2020ம் ஆண்டு வடசென்னையை சம்போ செந்திலுக்கும், காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதற்காக மாறி மாறி தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகில் வைத்து நாட்டு வெடிகுண்டை காரின் மீது சம்பவம் செந்தில் வீசினார். இதில் நூலிழையில் இருவரும் உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: Free Electricity Cancellation: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து! யாருக்கெல்லாம் தெரியுமா?
கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டம் வழக்கில் காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகு, ஜாமீனில் வெளியே வந்த காக்கா தோப்பு பாலாஜி அதன் பிறகு தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த நிலையில், கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டுள்ளனர். காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக ஓட்டுநர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் பின்பகுதியை சோதனையிட்ட போது கார் திடீரென புறப்பட்டு சென்றுள்ளது. இதனால், உடன் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது காரினுள் இருப்பது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்ததால் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர்.
kakkathoppu balaji
கார் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிக்கு சென்ற காக்கா தோப்பு பாலாஜி காரை விட்டுவிட்டு புதரை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, போலீஸ் வாகனம் வருவதை கண்டு போலீசாரை நோக்கி தான் வைத்து இருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டுள்ளார் காக்கா தோப்பு பாலாஜி. இதனால், போலீஸ் வாகனத்தின் பேனட் மற்றும் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. பின்னர், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதனால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்குகள், 10க்கும் மேற்பட்ட ஆள் கடத்தல் வழக்குகள் உட்பட 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 12 முறை குண்டர் தடுப்பு காவலிலும் கைது செய்யப்பட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.