School Girls: இனி மாணவிகளிடம் யாரும் வாலாட்ட முடியாது! சூப்பர் பிளானோடு களமிறங்கிய தமிழக அரசு!

First Published | Oct 12, 2024, 7:45 PM IST

Government School Girls: பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கவும், மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை அளிக்கவும், தமிழக அரசு தற்காப்புக் கலை பயிற்சிக்கு ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் வன்முறைகள் ஓய்ந்தபாடியில்லை. இதை தடுக்க தற்காப்பு கலை என்ற விஷயம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அறிவுத்தியுள்ள ராணி லட்சுமிபாய் தற்காப்பு கலை பயிற்சி திட்டத்தின் கீழ் 2015ம் ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி 2023–24 நடப்பு கல்வியாண்டுக்கான பயிற்சிக்காக 6,941 நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளிக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் விதம் மொத்தம் ரூ.10.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல்  6,267 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்காப்பு பயிற்சிக்காக ரூ.9.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இவை மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும். பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அரசு நம்புகிறது.

Latest Videos


தற்காப்பு கலை பயிற்சியாளர்களை பள்ளி மேலாண்மைக் குழுக்களே தேர்வு செய்ய வேண்டும். மேலும், பெண் ஆசிரியைகள் மேற்பார்வையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்த பயிற்சியில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களை கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுதர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த 1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மொத்தம் 1,400 மாணவிகளுக்கு காரத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும் பயிற்றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியை வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர், மைய கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

click me!