
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஐபோன் உதிரிபாகங்களை தயார் செய்யும் 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக விடியல் ரெசிடென்சி கட்டப்பட்டுள்ளது. இங்கு 8 பிளாக்கில் 11 அடுக்குகள் கொண்ட விடுதி உள்ளது. ஒரு அறைக்கு 4 பேர் வீதம் மொத்தம், 6,250 தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண்களின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் இரவு, விடுதியில் தங்கியிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விடுதி முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி நீலுகுமாரி குப்தா(22) என்பவர், குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியதும், அவரது ஆண் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில், அவர் ரகசிய கேமரா பொருத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு கிஞ்சிற்றும் அக்கறை காட்டாமல் செயல்படுவது வேதனைக்குரியது என வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள டாட்டா நிறுவனத்தில் நடந்திருக்கும் கொடூரமான குற்றச் செயல், தமிழகத்தின் ஒட்டுமொத்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளம்பெண்களின் பாதுகாப்பிற்கே விடுக்கப்பட்ட சவாலாகும். கிட்டத்தட்ட 22,000 திற்கும் அதிகமானோர் பணியாற்றும் அந்த நிறுவனத்தில், ஒரு வடமாநில பெண், நூற்றுக்கும் அதிகமான ரகசிய கேமராக்களை அலுவலகத்தின் தங்கும் விடுதியின் கழிவறைகளிலும், குளியல் அறைகளிலும் வைத்து, நமது தமிழ்ப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்துள்ளார். அதைத் தன் காதலன் மூலம் பல வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி, பணமீட்டும் கேவலமான தொழிலை நடத்தியிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த இழிவான குற்றச் செயலைக் குறித்துத் தகவல் அறிந்த ஒரு தமிழ் இளைஞர் தட்டிக் கேட்ட போது, அந்த நிறுவனத்தின் காவலாளிகள் அவரை கொடூரமாக தாக்கி, காயப்படுத்தி இருக்கிறார்கள். இந்தக் கொடூரச் செயல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் காவல்துறை கைது செய்யவில்லை. மேலும், காவல்துறை அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்த கொடூரமான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு கிஞ்சிற்றும் அக்கறை காட்டாமல் செயல்படுவது வேதனைக்குரியது. ரியல் எஸ்டேட், வணிகம் போன்ற துறைகளில் தமிழ்நாட்டை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பது ஒருபுறம். அனைத்து தொழில் துறைகளிலும் அவர்கள் மேலோங்கி இருப்பது இன்னொருபுறம். மிக முக்கியமான மனித உழைப்பிலும் அவர்களே அதிகமாகத் திணிக்கப்பட்டு, நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், இன்று தமிழ் பெண்கள் சந்திக்கும் இந்தக் கொடூரமான பாலியல் குற்றச் செயல்கள், தமிழர்கள் மீதான அவர்களின் கிரிமினல் மனப்பான்மையையும், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பின்மையையும் உறுதிப்படுத்துகிறது. தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசிடம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளை இந்தச் சூழலில் மீண்டும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் பணியாற்ற வரும் வட மாநிலத்தவர்களுக்கு, உள்நுழைவுச் சீட்டு முறைக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். ஒப்பந்தக் காலம் முடிந்தபின் அவர்கள் வெளியேறுகிறார்களா? என்பதைத் தமிழக அரசின் காவல்துறை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பணியாற்றும் இடங்களிலேயே, ஒப்பந்ததாரர்கள் , அவர்களுக்கான குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒப்பந்த முறைகளை பின்பற்றி வரும் வட மாநிலத்தவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு ஒப்பந்ததாரர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக நலனுக்காகவும், தமிழர் வாழ்வுரிமைக்காகவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், தி.வேல்முருகன் ஆகிய நான், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பலமுறை வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கைகள் மீது, தமிழக அரசு இன்னும் அக்கறை காட்டவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
அது மட்டுமல்ல ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக திட்டமிட்டு தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களை குடியேற்றுவதும், அவர்களைச் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மூலமாக வாக்காளர்களாக மாற்றி, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்கள் என்பதையும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் அறியாததல்ல. எனவே, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, இனியும் காலதாமதம் செய்யாமல்,சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்ணையும், அவருடைய காதலரையும், அதைத் தட்டிக் கேட்ட தமிழ் இளைஞரைத் தாக்கிய நிறுவனத்தின் காவலாளிகளையும், துணைபோன நிர்வாகத்திற்கு தொடர்புடையவர்களையும், தமிழக அரசு உடனடியாக கைது செய்து, நீதியின் முன் நிறுத்தி, மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.