Tamilnadu Rains
தமிழ்நாட்டில் டிசம்பர் 16ம்தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ''மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று நிலவும். இதன் காரணமாக வரும் 16-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம்.
Heavy Rain in Tamilnadu
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16, 17, 18-ம் தேதிகளில் பரவலாகவும், 19-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வெளுத்துக்கட்டும் மழை; இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விவரம்!
Chennai Rains
வரும் 18-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி 29 இடங்களில் அதிகனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 16 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
Tirunelveli Flood
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 40 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட 32 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. டிச. 12-ம் தேதி வரை 16 சதவீதம் மட்டுமே மழை அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 16 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரண பயத்தை காட்டும் வடகிழக்கு பருவமழை!