Chennai Rains
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நின்றுவிட்டது. மற்ற மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மழை நின்றுவிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டது.
tamilnadu rain
அதாவது ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே கடந்த 6 மணி நேரத்திற்கு மேலாக நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடைவிடாமல் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, புதுச்சேரியில் குறைவான நேரத்தில் அதீத கனமழை பெய்தது.
இதனால் விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் சாலை மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னையை காட்டிலும் விழுப்புரத்திலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் ஏரி உடையுமோ என்ற மரண பீதியில் இருக்கும் அளவுக்கு மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., திண்டிவனத்தில் 37.40 செ.மீ, நேமூர் 35.20 செ.மீ, வல்லம் 32 செ.மீ., செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
rain
விழுப்புரம் பேருந்து நிலையம் ஏரி போல் தண்ணீரில் மூழ்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி அரசு மருத்துவமனையிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை காரணமாக செஞ்சி சுற்றியுள்ள பல கிராமங்களில் நேற்று காலை முதல் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.