
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத் திட்ட (RCH) பகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.1,500லிருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்புகளுள் ஒன்றான ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவ சேவைகள் வழங்கும் பொருட்டு, பேருசார் குழந்தைகள் நலத்திட்டம் தேசிய ஊரக நலத்திட்டத்தின்கீழ், நோயாளர் நலச்சங்கம் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ நேரங்களில் அறையினை தூய்மையாக வைத்துக் கொள்ள செவிலியர்களுக்கு உதவியாக இருக்க ஆரம்ப சுகாதார நிலைய தூய்மை பணியினை மேற்கொள்ள RCH தூய்மை பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஏறத்தாழ 2002 ஆம் ஆண்டு பணிநியமனம் செய்யப்பட்ட இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.500 என்று இருந்தது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.1,000 என்று உயர்த்தப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.1,500 என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, இப்பணியாளர்களின் வாழ்வில் ஒரு விடியலை ஏற்படுத்தும் பொருட்டு, கோவிட் காலங்களில் பணியாற்றிய பேருசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மை பணியாளர்கள் 938 பேர் தேர்வு செய்து அவர்கள் மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாகஊதியம் என்கின்ற வகையில் ஏறக்குறைய ரூ.27,000 வரை ஊதியம் பெற்று
வருகிறார்கள். அதில் மீதமிருக்கும் 1,575 பேருக்கு இன்று ஊதியம் உயர்த்தி வழங்கும் ஆணைகள் தரப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரூ.1,500 சம்பளத்தில் இருக்கின்ற இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என்றுசொன்னார். அப்போது இந்த தகவலை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த ஊதியம் ரூ.500, ரூ.1,000மற்றும் ரூ.1,500 என்று இருந்தது. இந்த நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 938 பேருக்கு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஏறக்குறைய ரூ.27,000 வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்தப் பணிகள் காலியாகின்றபோது அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப கோவிட் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்னோம், அதேபோன்று இன்னொன்று ரூ.1,500 ஊதியம் கடந்து அவர்களுக்கு மிக விரைவில் அவர்களது பட்டியலை சரிபார்த்து ரூ.5,000 ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் தொடர்ந்து அவர்களுக்கு எந்தந்த காலக்கட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்கின்ற விவரங்களை பெறப்பட்டு யார் யாருக்கு கல்வித்தகுதி, வயது தகுதி போன்ற விவரங்கள் பெறப்பட்டு அந்தவகையில் 1575 பேர் மீதமிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.5,000 வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ரூ.5,000 மட்டுமல்லாமல் முதலமைச்சர் ரூ.1,500யை தேசிய நலவாழ்வு குழுமம் மூலமாக வழங்கப்படுகிறது என்றாலும் மாநில அரசின் சார்பில் ரூ.5,876 கூடுதலாக வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.7,376 வழங்க ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பாத்து வந்தது ரூ.5,000 இது 10 நாட்களுக்கு முன்பாக இதே அரங்கில் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும் என்று அறிவித்தோம்.
அந்த வகையில் அவர்களுக்கு ரூ.5,000 என்று அறிவிக்கப்பட்டு ரூ.7,376 என்று உயர்த்தி வழங்கப்பட்ட ஆணைகள்வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று அவர்களது கல்வித்தகுதி மற்றும் பல விவரங்களை கேட்டு பெற உள்ளோம், அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாகின்ற போது கோவிட் காலங்களில் பணியாற்றியவர்கள் என்கின்ற வகையிலும், ஏறத்தாழ 20 ஆண்டுகள் பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் என்கின்ற வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமை தந்து மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளில் அவர்களுக்கு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.