அரசுப் பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நடைமுறையில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை அறிவித்துள்ளது. விண்ணப்ப பதிவு, மூப்பு பட்டியல் தயாரிப்பு பணி வழங்குதல் உள்ளிட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக உள்ளனர். எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். தனியார் நிறுவனங்களை ஒப்பிடும் போது வேலை பாதுகாப்பு,
பல்வேறு நிதி உதவி பலன்கள், விடுமுறை என பல சலுகைகள் உள்ளது. இந்த நிலையில் அரசுக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள் திடீரென பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணியானது வழங்கப்பட்டு வருகிறது.
23
கருணை அடிப்படையில் அரசு பணி
அந்த வகையில் அரசு பணியின்போது இறந்தாலோ, உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் இருக்கும்போது ஓய்வு பெற்றாலோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான விதிகளின் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தத்தில், கருணை அடிப்படையில் பணி வழங்க கோரும் விண்ணப்பங்களை மாநில அளவில் ஒரு பட்டியல் கொண்டு பதிவு மூப்பு தயார் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
33
3 ஆண்டுகளுக்குள் பணி
மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் தொடர்பாகவும் மாநில அளவில் ஒரே பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக தனியாக இணையதளத்தை உருவாக்கி அதில் இந்த தகவலை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலிப் பணியிடங்களின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள் பணி வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தத்தால் பல ஆண்டுகாலமாக கருணை அடிப்படையில் வேலை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.