அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியினர் காலில் விழவும் தயார் எனக் கூறிய நிலையில், காலம் கடந்துவிட்டதாக எடப்பாடி பதிலளித்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகளாக பிரிந்து கிடக்கிறது அதிமுக. ஓ.பன்னீர் செல்வம் ஒரு பக்கம், டிடிவி தினகரன், சசிகலா என தனித்தனி அணியாக உள்ளனர். இதனால் வாக்குகள் சிதறி தேர்தலில் தோல்வி மட்டுமே அதிமுகவிற்கு கடந்த 8 ஆண்டுகளாக கிடைத்து வருகிறது.
எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஓருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் தற்போது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்போ எந்தவித பதில் அளிக்காமல் உள்ளது.
25
அதிமுகவில் இணைய தயார்- ஓபிஎஸ்
இந்த நிலையில் தான் காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைய வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பேசியவர், "எடப்பாடி பழனிசாமி காலில் கூட விழ தயார், தயவு செய்து எங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.
மேலும், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணையாவிட்டால், 2026ல் தமிழகத்தில் "மூன்றெழுத்து கட்சி" ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் அளித்துள்ளார்.
35
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்து பேட்டியில் கூட்டணி, ஓபிஎஸ், டிடிவி இணைப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்த வகையில் 2006 சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள். அது ராஜதந்திரமா? அல்லது குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
எந்த இடத்திலும் தி.மு.க கூட்டணிக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார். மமேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாராவது உங்களிடம் பேசிவருகிறார்களா? வர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு அப்படி எதுவும் இதுவரை இல்லையென தெரிவித்துள்ளார்.
அடுத்தாக பிரச்சாரத்தின் போது அதிமுகவில் பிரமாண்டகட்சி இணையும் என்று சொல்லி இருக்கிறீர்களே, அந்த பிரமாண்டகட்சி எது? என்ற கேள்விக்கு அது ரகசியம் என பதிலளித்துள்ளார். மற்றொரு கேள்வியான அ.ம.மு.க உங்கள் கூட்டணியில் இடம் பெறவாய்ப்பு உள்ளதா? என்பதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி 'காலம் பதில் சொல்லும்' என்று தெரிவித்தார்.
அடுத்ததாக காலில் கூட விழுகிறோம் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் பேசியது தொடர்பான கேள்விக்கு காலம் கடந்த செயல், காலம் கடந்துவிட்டது' என்றும் கூறினார்.
55
காலம் கடந்த செயல்- எடப்பாடி
அதே நேரம் கூட்டணி கட்சியாக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் சேர்க்கவாய்ப் பிருக்கிறதா? என்ற கேள்விக்கு 'எல்லாம் கடந்துவிட்டது. தனிக்கட்சி தொடங்கினால் தானே அதுபற்றி பேசணும், அதிமுகவிற்கு எதிராகத்தானே தற்போது வரை குரல் கொடுத்து வருகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த விடாப்பிடியான பதிலால் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் அதிமுகவில் ஓபிஎஸ்யை இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் பலம் கிடைக்கும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். எனவே தற்போதைய நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு இல்லாத நிலை தான் ஏற்பட்டுள்ளது.