அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்கக் கோரிய செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் பசும்பொன்னில் ஒன்றாக மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூட்டாக தெரிவித்தனர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதனையடுத்து அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் இணைந்தார். இதனையடுத்து ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் மூன்று கூட்டாக மரியாதை செலுத்தினார்.
34
ஓ.பன்னீர்செல்வம்
முதலில் ஓபிஎஸ் பேட்டியளிக்கையில்: அதிமுகவில் பிரிந்துள்ள அனைத்து சக்தியும் ஒன்றிணைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்று தேவர் நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால் தான் மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னேன். மீண்டும் அதிமுக ஆட்சி வரும் என்று நான் சொல்லவில்லை தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு ஏன் அவசரம் என ஓபிஎஸ் பதில் அளித்தார்.
இதனையடுத்து டிடிவி.தினகரன் பேட்டியளிக்கையில்: ஜெயலலிதாவின் பாதுகாப்பு அரண்களாக செங்கோட்டையனும், ஓ.பன்னீர்செல்வமும் திகழ்ந்தனர். மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியை கொண்டு வர ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்றுவோம். இது போன்ற சந்திப்புகள் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் நடைபெறும். துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் எங்கள் எதிரி. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா முன்னேற்ற கழகம் என்றும் ஓயாது. சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்துள்ளார். சசிகலா கால தாமதமாக கிளம்பியதால் எங்களுடன் ஒன்றாக தேவருக்கு மரியாதை செலுத்த வர முடியவில்லை. எதிர்க்கட்சி என்பதாலே ஆளுங்கட்சியை எதிர்க்க மாட்டோம். அனைத்து விவகாரத்திலும் அரசின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்த பிறகே எங்கள் நிலைப்பாட்டை சுட்டிக் காட்டுவோம் என டிடிவி.தினகரன் கூறினார்.