தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும்; குறைந்தது 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
இதேபோல் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுகவிடம் இருந்து ஆட்சியை பறித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. திமுகவை போல் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தயாராகி வருகிறது. மறுபக்கம் பாஜக இந்த முறை கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பலமான கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.
24
Tamilnadu Election 2026
மேலும் புதிதாக உதயமான விஜய்யின் தவெக மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் தவெக கூட்டணி சேருமா? என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் இந்த முறையாது வலுவாக காலூன்ற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. இப்படி தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கனவு காண்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 200 இடங்களில் வெற்றி வாகை சூடும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கூட்டணி சரியாக அமையவில்லை என கூறினார்கள். கூட்டணி வரும் போகும்; ஆனால் கொள்கை நிலையானது. தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுகதான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்'' என்றார்.
44
Edappadi Palaniswami Speech
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருப்பதாக கூறி இருப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்திக்க முடிவு எடுத்து இருப்பது எடப்பாடி பழனிசாமியின் சரியான நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்தார். அதற்கு நல்ல பலன கிடைத்தது; திமுக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வராகி விட்டார். ஆகவே ஸ்டாலின் பாணியை பின்பற்றி எடப்பாடி பழனிசாமியும் மக்களை சந்திக்க முடிவெடுத்து இருப்பது அதிமுகவுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று அரசியல் நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.