இர்பான் விவகாரம்! வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிட்டு அமைச்சர் பம்மி பதுங்கியது இதற்காக தான்! இபிஎஸ்!

First Published | Nov 20, 2024, 6:37 PM IST

யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டிய விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த இர்பான், அங்கிருந்த மருத்துவரின் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் துண்டித்தார். இதை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் இர்பான் பதிவிட்டார். இது வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

மருத்துவ விதிகளுக்கு புறம்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர், இர்பான், மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இர்பானுக்கு, தனியார் மருத்துவமனைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம், ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால், தனியார் மருத்துவமனை அக்டோபர் 24-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு செயல்பட தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Tap to resize

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. இந்தமுறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விடமாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறியிருந்தார். அடுத்த சில நாட்களிலேயே பல்டி அடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இர்பான் செய்தது ஒன்றும் கொலை குற்றமில்லை. இது பெரிய விசயமல்ல என்று கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி காட்டாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், சட்ட விரோதமாக செயல்பட்டு, 'குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கெனவே இந்த யூடியூபர் இர்பான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர். அதிமுக ஆட்சியில் சாதனைத் துறையாக விளங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை, ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறி, நோயாளிகளின் உயிருடன் விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. 


தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால் அவர்களுக்கு சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தை காற்றில் பறக்கவிடுவதுமாக, மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதலமைச்சரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே மந்திரிகளாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம். தமிழக மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல - திறமைசாலிகள்... நேரம் வரும் போது இந்த அராஜக ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப்போவது திண்ணம் என கூறியுள்ளார்.

Latest Videos

click me!