வேட்புமனுவில் தவறான தகவல்! உச்சநீதிமன்றம் கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி!

First Published | Jan 26, 2025, 12:50 PM IST

2021 சட்டமன்றத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. 

வேட்புமனுவில் தவறான தகவல்! உச்சநீதிமன்றம் கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி!

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அசையும் சொத்து ரூ.3.14 கோடியும் அசையா சொத்து ரூ.4.66 கோடி இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலின் போது அசையும் சொத்து மதிப்பு ரூ.2.01 கோடியும் அசையா சொத்து ரூ.4.68 கோடி இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். 

Chennai High Court

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ரூ.1 கோடி அளவிற்கு சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்து தவறாக தெரிவித்ததாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல் துறை விசாரணைக்கு முதலில் இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. 


Edappadi Palanisamy

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ? அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

AIADMK

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து ஜனவரி 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த புகாரில், போலீசார் விசாரணையை தொடரலாம். அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கூறிய நீதிபதி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

Supreme Court

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு இடைக்கால தடை விதிக்கப்படுமா? அல்லது இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்யுமா? என்பது தெரியவரும். 

Latest Videos

click me!