நண்பர்களோடு குறைந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் ஜாலியாக சுற்றிப்பார்க்க கூடிய டாப் 10 இடங்கள் என்ன.?

First Published | Sep 24, 2024, 12:24 PM IST

இயந்திர வாழ்க்கையில் ஓய்வு கிடைத்தால் எங்காவது செல்லலாம் என ஏங்கும் மக்களுக்கு, குறைந்த செலவில் தமிழகத்தில் எங்கு செல்லலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். மலை, கடல், அருவி என பல்வேறு சுற்றுலா தலங்கள் குறைந்த செலவில் மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

இயற்கையை தேடும் மக்கள்

இயந்திர வாழ்க்கையில் அதற்கு ஈடாக மக்களும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்போது ஓய்வு கிடைக்கும் சற்று ஓரமாக அமர்ந்து இளப்பாறலாம் என கோடிக்கணக்கான மக்கள் ஏங்கி தவிக்கிறார்கள். அப்படி ஏங்கி தவிக்கும் மக்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே நிம்மதியாக தூங்கலாம் என நினைப்பார்கள் அதுவே இரண்டு அல்லது அதற்கு மேல் விடுமுறை கிடைத்தால் எந்த ஊருக்கு செல்லலாம் என திட்டம் போட தொடங்கிவிடுவார்கள்.

இதில் பெரும்பாலான உயர் தர வகுப்பு மக்கள் நினைத்த நேரத்தில் அசால்டாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள், அமெரிக்கா, லண்டன், தாய்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா என பறக்க தொடங்கி விடுவார்கள். இதுவே நடுத்தர வர்க்க மக்கள் இந்தியாவில் சிம்லா, கூர்க், காஷ்மீர், ராஜஸ்தான் என திட்டமிட்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். அதுவே குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு பீச், பூங்கா தான் சுற்றுலாவாக அமையும், 

நண்பர்களின் டூர் பிளான்

மாத சம்பளத்தில் துண்டு விழாமல் எங்கெல்லாம் செல்லலாம் என பெரிய பட்டியலே தயாராக வைத்திருப்பார்கள். இதே போல இளைஞர்கள் தங்களது நண்பர்களோடு ஊர் சுற்ற வேண்டும் என ஆசையோடு திட்டம் போடுவார்கள். முதலில் கோவா என தொடங்கும் பயணம் அடுத்ததாக பாண்டிச்சேரி என வரும். அடுத்ததாக தெரு ஓரத்தில் இருக்கும் டீ கடையோடு சுற்றுலா முடிந்து விடும். இதற்கு பல காரணங்கள் உண்டு. இளைஞர்கள் டூர் போகலாம் என ஆர்வமாக வாட்ஸ் அப்பில் குழு தொடங்குவார்கள். அடுத்த இரண்டு நாட்கள் படு வேகமாக பிளான் நடக்கும். கேரளா, கர்நாடகா, கோவா என பட்டியல் நீளும். எப்படி போகலாம், எந்த எந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் என தீவிரமாக பேசிக்கொள்வார்கள். இறுதியாக பட்ஜெட் என்று வரும் போது ஒருவர் பின் ஒருவராக அமைதியாவார்கள். அந்த டூருக்காக தொடங்கப்பட்ட குழுவானது காற்று வாங்கும்.
 

Latest Videos


 தமிழகத்தில் சுற்றுலா இடங்கள்

இப்படி ஆயிரக்கணக்கான குழுக்கள் எதற்காக தொடங்கப்பட்டதோ அதற்கான செயல்கள் இல்லாமல் முடங்கிவிடும்,  இப்படி திட்டமிட்டு சோர்ந்து போகும் இளைஞர்கள் பட்ஜெட்டில் தமிழகத்தில் எந்த எந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் சுற்றுலாவை பல வகையிலும் பிரிக்கலாம். அந்த வகையில் குளுமையை தேடி செல்பவர்களுக்கு மலைப்பகுதி சுற்றுலா சிறந்த இடமாக உள்ளது. முதலில் மலைப்பகுதி சுற்றுலா என பார்க்கும் போது,

கிழக்கு  தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்சி மலை தொடர்கள் உள்ளது. இதில், ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி, திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை குறைவான பட்ஜெட் தொடருக்கு சிறந்த இடமாக உள்ளது. அடுத்ததாக மேற்கு தொடர்ச்சி மலையை பார்க்கும் பொழுது 
ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், வாழ்பாறை, கொடைக்கானல், மேகமலை என நீண்டு கொண்டு செல்கிறது. இந்த இடங்களுக்கு குறைவான கட்டணத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.

பட்ஜெட் சுற்றுலா

குறிப்பாக பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்தாலே ஒருவருக்கு அதிகபட்சம் 1000 முதல் 1500 ரூபாய் வரை மட்டுமே சென்று திரும்பி வர ஏற்படும். மேலும் தங்கும் வசதியும் 600 ரூபாயில் இருந்து 1000ரூபாய் வரை குறைந்த பட்ஜெட்டில் நல்ல தரமான விடுதிகளும் உள்ளது. உணவைப்பொறுத்த வரை பெரிய அளவில் விலை வர வாய்ப்பு இல்லை. ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 300 ரூபாய் வரும். அடுத்ததாக கடற்கரை சுற்றுலாவை பொறுத்தவரை, மகாபலிபுரம், புதுச்சேரி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற இடங்கள் உள்ளது. இங்கு குறைந்த செலவில் பல இடங்களை சுற்றிப்பார்க்கலாம். குறிப்பாக ராமேஸ்வரம் தனி தீவாக உள்ளது. இந்த தீவை இணைப்பது பாம்பன் பாலம் தான் இந்த இடத்தை இலவசமாக கண்டு களித்து புகைப்படமும் எடுக்கலாம்.

தீவுகளில் சுற்றுலா

இது மட்டுமில்லாமல் தனுஷ்கோடி பகுதிக்கு பேருந்திலே செல்லலாம் இதற்கும் கட்டணம் மிகவும் குறைவு ஒரு நபருக்கு அதிகபட்சம் 20 ரூபாய் தான். அங்கு இரண்டு கடல் இணையும் இடம் மிகவும் அருமையாக இருக்கும். அடுத்தாக பாம்பன் பகுதியில் இருந்து தனி தீவாக உள்ள குருசடைக்கு போட்டில் அழைத்து செல்வார்கள். அங்கு லட்சத்தீவை போன்று அழகிய கடற்கரை காட்சியளிக்கும். பவளப்பாறைகள் கடலின் வளத்தை எப்படி பாதுகாக்கிறது என்பது கண்கூடாக பார்க்க முடியும்.

அருவிகளில் சுற்றுலா

அடுத்ததாக அருவி மற்றும் நீர் சார்ந்த சுற்றுலாவாகும். குறிப்பாக அருவி என்றாலே அணைவருக்கும் நினைவிற்கு வருவது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் தான்.  மெயின் அருவி, 5அருவி, பழைய அருவி, சிற்றருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் என நீர் சார்ந்த இடங்கள் ஏராளம். இங்கும் குறைவான பட்ஜெட்டில் ஏராளமான இடங்களை சுற்றிப்பார்ப்பது மட்டுமில்ல சீசன் நேரத்தில் சாரல் மழையோடு இயற்கையை ரசிக்கலாம். அடுத்தாக தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி, வீரபாண்டி அறு, கும்பக்கரை அருவி மக்கள் மனதை எப்போதும் விட்டு செல்லாது. 

உங்கள் பயண திட்டம் ரெடியா.?

குழந்தைகளும் குளித்து ஆட்டம் போட ஏற்ற இடமாக அமைந்துள்ளது. இதே போன்று ஈரோடு கொடிவேறி, ஒகேனக்கல், போன்ற இடங்களிலும் நீர் நிலைகளில் குளித்து மக்கள் ஆட்டம் போடுகின்றனர். இது  போன்ற இடங்கள் நண்பர்களோடு சுற்றிப்பார்க்கவும்,, குறைந்த பட்ஜெட்டில் ஆட்டம் போடவும் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக உள்ளது. எனவே சுற்றுலாவிற்கு திட்டம் போடுவதற்கு முன்பு எந்த இடத்திற்கு பயணம் செய்ய போகிறோம் என திட்டமிட்டு பயணித்தால் பட்ஜெட்டிற்குள் இயற்கையை ரசிக்கவும் அனுபவிக்கவும் முடியும்.  

click me!