
தேர்தல் சமயத்தில் புதிதாக கட்சிகள் முளைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழகத்தையே தூக்கிச் சாப்பிடுமளவுக்கு திருப்பத்தூர் ஆளுங்கட்சி எம்எல்ஏவின் அண்ணன் ஒருவர் ‘அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய சாதி கட்சியை ஆரம்பித்து திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்.
திருப்பத்தூர், மாடப்பள்ளியை சேர்ந்தவர் மறைந்த அண்ணாதுரை. திமுகவின் மூத்த முன்னோடியான இவர். ஒன்றிய செயலாளராக தொடர்ந்து கோலோச்சியவர். ஒன்றிய சேர்மனாகவும் பதவி வகித்தவர். இந்தப் பகுதியில் கட்சியை வளரத்தெடுத்தவர்களில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. இவருக்கு இரு மகன்கள். இளைய மகன் நல்லதம்பி. அண்ணாதுரை மகன் என்பதாலே, மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்தனர். ஆனால், தாத்தா, அப்பாவை போல் கட்சியை வளர்க்கவில்லை எனவும் தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் பெரிய அளவில் செய்யவில்லை எனவும் தொகுதி முழுவதும் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிலும், அதிமுகவிலும் தனக்கு நிகராக யாரும் போட்டியில் இல்லை என மிதப்பிலிருந்த நல்லத்தம்பிக்கு, இவரது பங்காளி ஒருவர் எதிரணியான அதிமுகவில் இருந்து களமிறங்கவதாகவும், அவர் நின்றால் வெற்றி உறுதியென பேசப்பட்டுவரும் சூழ்நிலையில் தோல்வியை சந்திப்பதை விட, கவுரவமாக போட்டியில் இருந்தே ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், தன் உடன்பிறந்த அண்ணன் ஆசியோடு புதிய கட்சியை தொடங்கி, திமுகவுக்கு ரெட் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர் கழகங்களில் உள்ள முக்கியஸ்தர்கள்.
அது என்ன ‘அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்?’ இதுகுறித்து கட்சி அறிவிப்பில் பங்கேற்ற சிலர், ‘‘திமுகவை துவங்கிய அண்ணா இல்லைங்க. இந்த அண்ணா, நல்லதம்பி எம்.எல்.ஏ.,வின் அப்பா பெயர். அப்பா பெயரோடு தனது சாதி (வெள்ளாளர்கவுண்டர் சமூகத்தை) இனைத்து அண்ணா ( BC) பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்" என வைத்திருக்கிறார்கள்.
இந்த கட்சி கடந்த தைப்பூசம் நாளன்று அதிகாலை 3 மணிக்கு சத்ரு சம்ஹார யாகத்தோடு ஆரம்பமானது. இந்த யாகம் எதிரிகளை அழிக்கவும், வெற்றியை பெறவும், செல்வச் செழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவது. இந்த யாகத்தில் சாதி கட்சி தலைவரான அருணாவின் உடன்பிறந்த தம்பியும், திருப்பத்தூர் திமுக சிட்டிங் எம்எல்ஏ-வுமான நல்லதம்பி குடும்பத்தினரோடு கலந்துக் கொண்டிருக்கிறார்.
இந்த யாக வேள்வி பூச நட்சத்திரம் தொடங்கும்வரை விடிய விடிய நடந்தேறியது. விடிந்த பின் எம்எல்ஏ., நல்லதம்பியின் அண்ணன் அருணகிரி தனது பரிவாரங்களுடன் இணைந்து கட்சி அறிவிப்பை வெளியிட்டு ‘‘திமுகவிற்காக எங்கள் சமுதாய பெரியவர்கள் பல நூறு ஏக்கர் நிலங்களை விற்று செலவழித்தார்கள். எங்கள் அப்பா கூட அப்படி செலவழித்தவர்தான். ஆனால், என்னை திமுகவினர் கண்டுக்கவே இல்லை.
நல்லத்தம்பியை எம்எல்ஏ-வாக்கிய நன்றிக்காக நான் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் வெற்றிக்கு வேலூர் தொகுதியில் உள்ள எங்கள் சமுதாய வாக்காளர்களை ஒருங்கிணைத்து வெற்றி பெற வைத்தேன். இப்போது அதே கதிர் ஆனந்த் என்னை கட்சியை விட்டே ஒதுக்கிவிட்டார். பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவும் கைவிட்டுவிட்டார். என்னை அவமதித்தால் தன் சாதி மக்களை அவமதித்ததாகவே அர்த்தம் என கட்சிக்கான காரணத்தை கூறினார்.
இவரது பங்காளியான டாக்டர் திருப்பதி எதிரணியில் வேட்பளாரக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை புரிந்துகொண்ட நல்லதம்பி, அண்ணன் மூலம் விருப்பம் இல்லாததை கட்சி அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு பல லட்சங்கள் செலவழித்து முன்னணி ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் தலைமைக்கு உணர்த்தி இருப்பதாக நினைக்கிறோம் என்றார்கள்.
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ., நல்லத்தம்பியின் அண்ணன் அருணகிரியிடம் பேசினோம். ‘‘அப்பா பெயரோடு சாதி உட்பிரிவான பிற்படுத்தப்பட்டோர் இணைத்து கட்சி ஆரம்பித்தேன். கட்சி அறிவிப்புக்கு நல்லத்தம்பி எந்த மறுப்பும் சொல்லவில்லை. பூஜையில் கலந்து கொண்டது உண்மைதான். அப்பா பெயரில் கட்சி தொடங்கியாதால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என் கட்சி தமிழ்நாடு தாண்டி, பிறமாநிலங்கள் அல்லாமல் அண்டை நாடுகளிலும் கிளை ஆரம்பிக்க போகிறேன்.
நேற்றுக்கூட அந்தமானில் கிளை தொடங்கிவிட்டுத்தான் வந்தேன். நாளை சிங்கப்பூர் போகிறேன்’’ என அதிர விட்டவரிடம் ‘‘உங்கள் சமுதாயம், முதலியார் சமூதாய வாக்காளர்களை திரட்டி, உங்கள் தம்பி வெற்றிக்கு உதவுவே கட்சி ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறதே’’ என கேட்டதற்கு, ‘‘அதெல்லாம் சொல்ல முடியாதுங்க’’ என கெக்கப்பிக்கேவென சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., நல்லத்தம்பியிடம் கேட்டதற்கு, ‘‘அறக்கட்டளைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்துக்கிட்டேன். நீங்கள் கூறுவது போல கட்சி தொடங்கினாரா? என்றெல்லாம் தெரியாதுங்க. அவருக்கும், எனக்கும் சம்பந்தமில்லைங்க’’ என்றார்.
திமுக -அபிமுக ‘பி டீம்’ கணக்கு என்ன? இதனால் யாருக்கு பலன் கிடைக்கும்? இந்த அரசியல் சதுரங்கத்தில் யார் சக்சஸ் ஆகப் போகிறார்கள் என்பது இன்னும் 70 நாட்களில் தெரிந்துவிடும்.