மண்டை காய்ச்சலில் திமுக- அதிமுக..! அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்..! 2026- தேர்தலில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!

Published : Jan 27, 2026, 02:02 PM IST

எந்த கட்சியின் கருத்துக்கணிப்பை எடுத்தாலும் ஒரு தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 3- 5 சதவீதம் மட்டுமே. இதனால் சர்வே எடுக்கும் நிறுவனங்களே யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? என புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு உள்ளனர்.

PREV
19
களத்தில் இறங்கிய பென் நிறுவனம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று களத்தை அறிய அதிமுக, திமுக, தவெக என எல்லா கட்சிகளும் ஆவலாக காத்துகொண்டு இருக்கிறார்கள். இதனால் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக கருத்துக்கணிப்புகளை நடத்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை வியூக வகுப்பு நிறுவனங்கள் மூலம் தமிழக கட்சிகள் தொடங்கி விட்டார்கள். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கருத்துக்கணிப்புகள் எடுப்பது, மக்களின் பல்சை ரிப்போர்ட்டாக பெறுவது, அதற்கு ஏற்ப வியூகங்களை மாற்றுவது என்று அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. மக்களின் பல்ஸை அறிந்து கொள்ள சர்வே டீம்களை தொடக்கத்தில் இருந்தே களமிறக்கி வருவது திமுக தான். 

ஆட்சி அமைந்ததிலிருந்தே முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் வழி நடத்தும் பென் நிறுவனம் தான் சர்வேக்களை எடுத்துக்கொண்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள், மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கஸ்டடி கொலை, நெல்லை கவின் ஆணவக் கொலை என்று தமிழகத்தை உலுக்கிய பல்வேறு விவகாரங்கள்ல மக்களின் பல்ஸை அறிந்து மேல் இடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியது பென் நிறுவனம்.

29
அதிர்ந்து போன அறிவாலயம்

இந்நிலையில், ஜோஸ் டைம் மற்றும் ஐபக் நிறுவனங்களையும் தங்களுக்கு ஆலோசனை அளிக்க சேர்த்துக் கொண்டது திமுக. இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த எட்டு மாதங்களில் மூன்று கட்டங்களாக சர்வேக்களை எடுத்துள்ளனர். இதில் கூடுதல் பலத்துக்காகவே ஷோ டைம், ஐ- பேக் நிறுவனங்களை திமுக அமர்த்தியிருக்க காரணம் அதிமுகவிடம் இந்த நிறுவனங்கள் சென்று விடக் கூடாது என்ற திட்டமும் அதில் ஒளிந்து இருக்கிறது. தமிழக மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான வியூக வகுப்பு நிறுவனங்களுடன் பென் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த நிலையில் வேறு வழியில்லாமல் தான் ஆந்திராவை சேர்ந்த பிரமாண்யா வியூக வகுப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது அதிமுக.

கடந்த ஆண்டு ஜூனில் பென் நிறுவனமும், ஷோ டைம் நிறுவனமும் தமிழகம் முழுவதும் எடுத்த சர்வேக்களில் தேர்தல் களம் எப்படி இருந்தாலும் 45 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதி என ரிசல்ட் அளித்திருக்கிறார்கள். அதோடு இன்னும் இறங்கி வேலை பார்த்தால் மேலும் 50 தொகுதிகளில் வெற்றிக்கனியை பார்க்கலாம். அதேசமயம் யார் வேட்பாளராக நிறுத்தினாலும் 50 தொகுதிகள் திமுகவுக்கு ரெட் தொகுதிகள் என்று ரிப்போர்ட் அளிக்க, அதிர்ந்து போய் இருக்கிறது அறிவாலயம். மீதம் இருக்கும் 89 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கவனமாக இருந்து, உட்கட்சி பஞ்சாயத்துகளை சரி செய்து, கடினமாக முயற்சி செய்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என ரிப்போர்ட் அளித்துள்ளன இந்த நிறுவனங்கள்.

39
உறுதிப்படுத்திய உளவுத்துறை ரிசல்ட்

2021 சட்டமன்றத் தேர்தலில் 133 தொகுதிகளில் வென்ற திமுகவிற்கு 45 தொகுதிகளில் மட்டுமே வெற்றி உறுதி என ரிசல்ட் கிடைக்கவே அதை உளவுத்துறையிடம் கொடுத்து கிராஸ் செக் செய்துள்ளது ஆட்சி மேலிடம். உளவுத்துறையும் சர்வே ரிசல்ட்டை உறுதிப்படுத்தவே, அறிவாலயத்தின் தேர்தல் வியூகங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 120 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவுக்கு 32சதவீத வாக்குகள் இருக்கிறது. தேர்தல் நேர வாக்குறுதிகள், பிரச்சாரங்களில் கவனம் செலுத்தினால் திமுக ஆட்சியைப் பிடித்து விடலாம். அதே சமயம் சுமார் 40 சட்டமன்ற தொகுதிகளில் தவெகவுக்கு 38 விழுக்காடு வாக்குகளும் இருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் குறைந்தது 12 சதவீத வாக்குகளை விஜய் கட்சி வைத்திருக்கிறது என அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. அந்த ரிப்போர்ட் தான் அதிமுக கூட்டணிக்கு சுமார் 27 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட சர்வேயில் தவெகவுக்கு செல்வாக்கு குறையவில்லை என்பதே ரிசல்ட் கூறுகிறது. பென், ஷோ டைம் மற்றும் ஐபக் ஆகிய மூன்று நிறுவனங்களையும் தாண்டி மாநில உளவுத்துறையையும் சர்வேக்கு பயன்படுத்திக் கொள்கிறது ஆட்சி மேலிடம்.இவர்களை எல்லாம் தாண்டி அண்டை மாநிலத்திலிருந்து தனக்கென ஒரு தனி டீமை வரவழைத்து சர்வை எடுக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் ஒரு நிம்மதி என்னவென்றால் தவெகவுக்கு செல்லும் வாக்குகளில் பெரும் பகுதி வாக்குகள் அதிமுகவிடம் இருந்து தான் செல்கின்றன என கிடைத்திருக்கும் ரிசல்ட்சொல்கிறது.

49
அதிமுகவின் சர்வே ரிசல்ட்

பொங்கல் பரிசு தொகையாக 3000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில், மாநில இடைக்கால் பட்ஜெட் சமர்ப்பிக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல்வர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாத இடையில் மற்றொரு சர்வே தொகுதி வாரியாக எடுக்கப்பட இருக்கிறது. அதையொட்டியே திமுகவின் தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படும் என்கிறார்கள். திமுக மூன்று சர்வைகளை எடுத்து முடித்திருக்கக்கூடிய நிலையில் அதிமுகவின் தேர்தல் பணிக்காக ஒப்பந்தமாக இருக்கும் பிரமாண்யா நிறுவனமும் சர்வேக்களை எடுத்திருக்கிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழகத்தில் நிலவக்கூடிய முக்கிய பிரச்சனைகளை மையமிட்டு அவ்வபோது சர்வை எடுக்கக்கூடிய அந்த நிறுவனம், மாதவாரியாக ரிப்போர்ட்டுகளை கொடுத்து வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பிரமாண்யா நிறுவனத்தின் சார்பில் பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார். விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்புண்மை, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என இந்த பிரச்சனைகளால் திமுகவுக்கு எதிரான அதிருப்திகளை இந்த நிறுவனத்தின் மூலம் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும் சர்வே முடிவுகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. 234 தொகுதிகளில் சர்வே எடுக்கப்பட்டதில் அதிமுக கூட்டணிக்கு 38 சதவீதமும், திமுக கூட்டணிக்கு 35 சதவீதமும் மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக அதிமுக சர்வேயில் தெரிய வந்துள்ளது. தவெகவுக்கு 17.5% பேர் மட்டுமே ஆதரவளிப்பதாகவும், நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேப்படி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 3% தான் சொல்லப்படுகிறது.

59
தெம்பில் எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கூட்டணியில் இருப்பதால்தான் அதிமுகவிடம் ஓரளவுக்கு நெருங்கி திமுக வருகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெகவுடன் சென்று விட்டாலும் கூட அதிமுகவின் வாக்குகளில் எந்த சேதாரமும் ஏற்படப்போவதில்லை. திமுகவிற்கு தான் பலத்த சேதாரம் ஏற்படும். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை அரசு ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் அதிகரித்து வருவது அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கிறது எனக் கூறப்படுகிறது. திமுகவிற்கு எதிரான மனநிலையை அறுவடை செய்யலாம். தவெகவுக்கு கட்டமைப்பு இல்லை என்கிற நம்பிக்கையில் இறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிரமாண்யாவின் ஆலோசனைப்படி பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமை தொகை, ஆண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தும் இருக்கிறார்.

69
தவெகவின் சர்வே ரிசல்ட்

இரு திராவிட கழகங்களுக்கு போட்டியாக தவெகவும் சர்வேக்களை எடுத்து வருகிறது. அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தை சென்னை மண்டலம், வடக்கு, மேற்கு, டெல்டா, தெற்கு என்று 5 மண்டலங்களாக பிரித்து சர்வே எடுத்து இருக்கிறது. இந்த மண்டல வாரியாக எடுக்கப்பட்ட அந்த சர்வேயில் டெல்டா மண்டலத்தில் விஜய் கட்சிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. 

சென்னை மண்டலத்தில் உள்ள வடமண்டலத்தில் கணிசமான வாக்குகள் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. பட்டியல் இன சமூகத்தினரும், மத மற்றும் மொழி வழி சிறுபான்மையினரும் கணிசமாகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தென் மண்டலத்தில் விருதுநகர், தேனி, தென்காசி உள்ளிட்ட சில பாக்கெட்டுகளில் தவெகவுக்கு செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வேயில 34 விழுக்காடு தவெகவுக்கு செல்வாக்கு இருப்பதாக அந்த நிறுவனம் எடுத்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு 31 விழுக்காடுகளும், அதிமுகவிற்கு 27.5%, நாம் தமிழருக்கு 6.5 விழுக்காடு வாக்குகள் இருப்பதாக பொடுவான கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. தமிழகத்தில் 2.29 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கிறது. அதாவது 2.29 கோடி குடும்பங்கள். அதில் 1.5 கோடி குடும்பங்களில் குடும்பத்திற்கு தலா ஒரு வாக்கு தவெகவிற்கு இருப்பதை விஜய் கட்சி மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் கண்டறிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 120 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய சூழலும் இருக்ப்பதாக வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

79
விஜய்க்கு ஸ்கெட்ச் போடும் பாஜக

பெரிய கட்சிகளைப் போலவே பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் சர்வேக்களை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவிற்கு பணியாற்றிய வாராஹி என்ற நிறுவனமே வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கான தேர்தல் வியூகங்கள், கருத்துக்கணிப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. பாஜகவிற்காக வாராஹி நிறுவனம் எடுத்த சர்வேயில் தற்போதுள்ள என்.டிஏ கூட்டணி 32.5 விழுக்காடு வாக்குகளும், திமுக கூட்டணி 28.5 விழுக்காடு வாக்குகளும் பெறும் எனக்கூறி உள்ளது. ராமதாஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கென உள்ள வாக்குகளையும் தனித்தனியே கொடுத்திருந்தது வாராஹி நிறுவனம். அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் என்.டி.ஏ கூட்டணி ரிஸ்க் எடுக்காமல் வெற்றி பெற டெல்லி மேலிடம் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் குடைச்சல், சிபிஐ விசாரணை என்று நெருக்கடிகள் கொடுத்து கூட்டணிக்குள் கொண்டு வர முயல்கிறது டெல்லி என்கிறார்கள்.

89
காலரை தூக்கும் காங்கிரஸ்

சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து காங்கிரஸ் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்த குழு,112 சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் ஆய்வு செய்து திரும்பியிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருக்கிறது என கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே விஜய் பக்கம் காங்கிரஸ் வர துடிப்பதாக கூறப்படுகிறது. டெல்லி குழு எடுத்த சர்வேயில் 50 சட்டமன்ற தொகுதிகளில் தவெகவுக்கு 30 விழுக்காடு அளவுக்கு வாக்குகள் இருப்பதாக ரிப்போர்ட் கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள். திமுகவுக்கு வெறும் 25 விழுக்காடு வாக்குகள் மட்டுமே இருப்பது அதிர்ச்சியும் கிளப்பி இருக்கிறது. இந்த முடிவுகளுக்குப் பிறகே காங்கிரஸில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பதாகவுக் கூறுகிறனர்.

99
ஆட்சி அமைக்கப்போவது யார்..?

அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு 80 தொகுதிகளில் செல்வாக இருப்பதாக வந்திருக்கக்கூடிய முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும்போது கொடுத்திருக்கிறார்கள். இந்த சர்வே முடிவுகளை வைத்து யாருடன் கூட்டணிக்கு சென்றாலும் அவர்களிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்கும் திட்டத்தில் காங்கிரஸ் இருக்கிறது என்கிறார்கள். இந்த முறை எந்த கட்சியின் கருத்துக்கணிப்பை எடுத்தாலும் ஒரு தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதனால் சர்வே எடுக்கும் நிறுவனங்களே யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? என புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான 118 கிடைக்கப் போவதில்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கான குதிரை பேரம் நடக்கப்போகிறது. அதன் பிறகு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும் என்கின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories