இயற்கையை தேடி செல்லும் மக்கள்
ஆண்டு முழுவதும் இயந்திரங்களோடு போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இளைப்பாறும் இடமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைப்பகுதிகள்உள்ள இடங்கள் உள்ளது. பச்சை பசை என காட்சி அளிக்கும் மரங்கள், குளுமையான காற்று, தலையை தொட்டு செல்லும் மேக கூட்டங்கள் என மலைப்பகுதிகள் ரம்மியமாக காட்சி அளிக்கும். சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு வாகனங்களில் இரைச்சல் சத்தத்தில் இருந்து ஓய்வு எடுக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள்.
அதுவும் கோடை காலம் என்றால் கேட்கவா வேண்டும், ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து விடுவார்கள். இதனால் சுற்றுலா தளங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. வாகனங்களில் சப்தத்தால் விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. மேலும் அதிகளவு மக்கள் கூடுவதால் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு என்ற நிலை உருவானது.
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
இதனையடுத்து இயற்கை ஆர்வலர்கள் மலைவாசஸ்தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்பட்டது. இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வதற்கு கண்டிப்பாக இ- பாஸ் வாங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் ஒரே நாளில் பல லட்சம் மக்கள் கூடுவது கட்டுப்படுத்தப்படும் எனவும், சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பாக கணக்கிட முடியும் என கூறப்பட்டது.
இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இ- பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் பதிவு செய்து பாஸ் வாங்குபவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களில் கோடிக்கணக்கான மக்கள் சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்தது தெரியவந்தது.
இ பாஸ் நடைமுறை நீட்டிப்பு
இந்தநிலையில் நேற்றோடு இ- பாஸ் நடைமுறை முடிவடைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளதாக கூறியுள்ளார்.
kodaikanal
இ பாஸ் பெறுவது எப்படி.?
எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம். மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 0451-2900233, 9442255737 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் கணக்கெடுப்பு
எனவே கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ- பாஸ் வாங்காமல் சென்றால் உள்ளே செல்ல அனுமதியானது மறுக்கப்படும். எனவே எளிதாகவே இபாஸ் பெற்று இயற்கையை ரசிக்கலாம். இ பாஸ் இணையதளத்திற்கு சென்று எந்த வாகனம், எத்தனை பேர், எந்த இடத்தில் தங்கவுள்ளனர், எத்தனை நாட்கள் என பதிவு செய்தால் அடுத்த ஒரே நிமிடத்தில் இ பாஸ் பெற்று விடலாம்.