திடீரென மூடப்படும் சென்னை விமான நிலையம்! எத்தனை நாட்கள்? எதற்காக?

First Published | Oct 1, 2024, 7:16 AM IST

இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சேவைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது.

இந்திய விமானப்படை சாகச நிகழ்வு

வானத்தில் விமானம் பறந்தால் சின்னக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அண்ணாந்து பார்க்கும் பார்க்கும் பழக்கும் இன்னமும் உள்ளது. அந்தளவிற்கு விமானம் மக்களை ஈர்க்கிறது. குறிப்பாக விமானப்படை விமானம் என்றால் கேட்கவா வேண்டும் பலத்த சப்தத்தோடு பறக்கும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும். மேலும் ஆபத்து காலங்களில் மக்களை மீட்பதில் விமானப்படையினரின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் இந்திய விமானப்படையில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம்  வீரர்களைக் கொண்டுள்ளது.

1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் உள்ளது. 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. இதனை  நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றது. தற்போது சென்னையில் வருகிற 6ஆம் தேதி விமானப்படையின் சாகச நிகழ்வு நடைபெறவுள்ளத்து. 
 

சென்னையில் விமான சாகச நிகழ்வு

மெரினா கடற்கரையில் பார்வையாளர்கள் அன்றைய தினம் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளை காணலாம். இந்திய விமானப்படையின் வகைவகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடவுள்ளது. விமானக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்தும் என விமானப்படை தெரிவித்துள்ளது.  

Tap to resize

இலவசமாகவே பார்க்கலாம்

இதுமட்டுமில்லாமல்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபடவுள்ளது. எனவே அக்டோபர் 6 ஆம் தேதியன்று மெரினா கடற்கரையில் நிகழும் இந்த விமான சாகசக்கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விமான சாகசத்தை பார்க்க பதிவுசெய்ய அவசியமில்லையெனவும்  இந்த நிகழ்வானது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சாகச நிகழ்வு  இந்தியவிமானப் படையின் வலிமையையும், திறன்களையும், நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதில் அதன் ஈடுபாடடையும் பிரதிபலிக்கும் என கூறப்பட்டுள்ளது.  வருகிற 6ஆம் தேதி இந்த சாகச நிகழ்வை பார்க்க சென்னையில் சுமார் 15 லட்சம் பேர் தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலைய சேவை

இந்த சூழ்நிலையில் விமான சாகச நிகழ்வுகளுக்கான ஒத்திகை இன்று (அக்டோபர் 1ஆம் தேதி) முதல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகையில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை விமான நிலைய பயணிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய விமானப்படை தினத்தையொட்டி  வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது. இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

ஒரு வாரத்திற்கு மூடப்படும் விமான சேவை

இதன்காரணமாக ,அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8 வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  
இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான்தடத்தில்  15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதன்முதலாக அக்டோபர் 1 ஆம் தேதி, மதியம் 1.45 மணி முதல் 3:15 மணி வரை வரை மூடப்படும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்ற நாட்களில் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

விமான பயணிகள் கவனத்திற்கு

எனவே  விமானப் பயண அட்டவணைகளைச் சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுப்பட்டுள்ளது.  மேலும் இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயனிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம், இந்திய விமானப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது எனவே பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!