
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் சென்னையில் துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி அவர்கள் நம் ஆட்சியை சி.எம்.சி.-“CMC’ (Corruption, Mafia, Crime) என்று விமர்சிக்கிறார். ஆனால் உண்மையில் ஊழல் (Corruption) வழக்கில் தண்டனை பெற்றுச் சிறை சென்றவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது அவர்தான். இரட்டை இலைச் சின்னத்திற்காகப் பணபேரம் பேசிச் சிறை சென்ற மாஃபியாக்களும் (Mafia), மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்குகளில் சிக்கியவர்களும் (Crime) இன்று அவர் பக்கத்தில்தான் அமர்ந்துள்ளனர்.
குஜராத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே 21 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. 11 பாலங்கள் இடிந்துள்ளன. மோர்பி பாலம் விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர். ஊழல் எங்கே நடக்கிறது என்பதற்கு இவைதான் சாட்சி.
கொரோனா காலத்தில் விளக்கேற்றச் சொன்னதும், தட்டு முட்டச் சொன்னதும்தான் மோடி அவர்கள் செய்த சாதனை. ஆனால், நம் முதலமைச்சர் நேரடியாக, கொரோனா வார்டிற்குச் சென்று ஆய்வு செய்து மக்களுக்குத் தைரியம் ஊட்டினார். பி.எம்.கேர்ஸ் (PM CARES) நிதியில் வசூலிக்கப்பட்ட 30,000 கோடி ரூபாய் என்னவானது என்று கேட்டால், அது “தனியார் நிதி’ என்று கூறித் தப்பிக்கிறார்கள்.
ஊழலுக்குப் பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராகப் பிரதமர் மோடி அவர்கள் இருப்பார் என்று நம் முதலமைச்சர் சொல்வது எவ்வளவு உண்மை! இப்படிப்பட்ட பா.ஜ.க. அரசு, தி.மு.க-வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் அற்றது. அதுமட்டுமல்ல, இன்று பா.ஜ.க ஆட்சியில் இல்லாத, பிற கட்சிகள், அவர்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில், ஆளுநரை வைத்து குறுக்கு வழியில், எப்படியாவது இடையூறு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில், முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு நம்முடைய சட்டசபையில் என்ன நடந்தது என்று நீங்கள் அத்தனை பேரும் பார்த்திருப்பீர்கள்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வந்து, அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய அந்த உரையைப் படிப்பதுதான் மரபு. ஆனால், இவர் வந்து என்ன சொல்கிறார்? “தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது, தேசிய கீதம் பாட வேண்டும்’’ என்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே எங்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றுதான், தேசிய கீதமும் ஒன்றுதான். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டு, கடந்த மூன்று வருடமாக ஆளுநர் அவர்கள் வாக்கிங் போவதற்குத்தான் சட்டசபைக்கு வருவார். இந்த முறை ஜாக்கிங் செய்துவிட்டு சென்று விட்டார். எடுத்தேன் பாரு ஓட்டம்! என வரும்போதே போவதற்கு அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டுத்தான் வந்தார்.
அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தைரியமாக எழுந்து சொன்னார், “இனிமேல் சட்ட நடவடிக்கை எடுப்போம், சட்டமன்றத்தில் இனிமேல் ஆளுநர் உரையே தேவையில்லை’’ என்கிற சட்ட நடவடிக்கையை இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் செய்யத் துணியாத ஒரு காரியம். “சட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்று தைரியமாகச் சொன்ன முதலமைச்சர். இதற்குப் பெயர்தான் சுயமரியாதை. ஆனால் இதற்கும் பார்த்தீர்கள் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநருக்கு ஆதரவு தருகிறார். அதனால்தான் நாங்கள் அடிக்கடி சொல்கிறோம், அ.தி.மு.க என்றால், இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது, அது அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறிப் பல வருடம் ஆகிவிட்டது.
அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுப் பாருங்கள், “இந்தித் திணிப்பைப் பற்றி ஏதாவது கருத்து சொல்லுங்களேன்’’ என்று கேட்டுப் பாருங்கள். என்ன சொல்வார்? “ஏன் இந்தியை திணித்தால் என்ன? அதனால் எங்கள் கூட்டணிக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.’’ என்பார்.
நீங்கள் அரசியலில் நிறைய முரட்டுப் பக்தர்கள், முரட்டுத் தொண்டர்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரே முரட்டு அடிமை, நமக்குத் தெரிந்த முரட்டு அடிமை அமித்ஷாவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான். அதுமட்டுமல்ல, நேற்று முன்தினம் பிரதமருடைய கூட்டத்தில் பேசும்போது, என் பெயரைச் சொல்லிப் பேசுகிறார். “உதயநிதி அவர்கள் துணை முதலமைச்சர் ஆகிவிட்டார், என்ன தகுதி இருக்கிறது?" என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று முன்தினம் பேசினார். என் தகுதி இருக்கட்டும், அதற்கு வருவோம்.
முதலில் உங்கள் தகுதி என்னவென்று உங்கள் கூட இருக்கிறார்களே, இப்போது நான்கு நாளாகக் கூட்டுச் சேர்ந்து சுற்றுகிறீர்களே, இவர்களெல்லாம் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? நான் என்னவென்று மட்டும் சொல்கிறேன், யார் சொன்னார்கள் என்று நீங்கள் கண்டுபிடியுங்கள்.
”துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்."
அதுமட்டுமல்ல, இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். ”அவரோடு கூட்டணி வைப்பதற்குத் தூக்குப் போட்டுத் தொங்கிவிடலாம்’’ என்று சொன்னவர் யார்?
இதற்கு கூட்டத்தினர் தினகரன் என்று தெரிவித்தார்கள்.
இன்னொருத்தர் இருக்கிறார் சொல்கிறேன் நீங்கள் யார் என்று கண்டுபிடியுங்கள். “எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு கவுன்சிலர் ஆவதற்கு கூட இவருக்குத் தகுதி கிடையாது. எடப்பாடி ஒரு டயர் நக்கி." இதைச் சொன்னது யார்?’’
இதற்கு கூட்டத்தினர் அன்புமணி என்று தெரிவித்தார்கள்.
எடப்பாடிபழனிசாமி அவர்களே, சத்தியமாக இந்தத் தகுதியெல்லாம் எனக்குக் கிடையாது. உங்கள் அளவுக்கு நான் தகுதி வாய்ந்தவன் கிடையாது. இதைச் சொன்னது நான் கிடையாது, உங்களோடு கூட்டு வைத்திருக்கும் உங்கள் கூடச் சேர்ந்து சுற்றுகிற உங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள்தான்.
இப்படிப்பட்ட அடிமைகளும் பாசிஸ்டுகளும் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இப்போது ஒன்றாக வந்தார்கள் என்றால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள்ளே மும்மொழிக் கொள்கையைத் திணிப்பார்கள், நிதி உரிமையை அதிகமாகப் பறிப்பார்கள். ஆகவே இதையெல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அதைவிட ஒவ்வொரு கழக உடன்பிறப்புகளுக்கும் நமக்கும் இருக்கிறது.
கருப்பு-சிவப்பு வேட்டி கட்டிய கலைஞரின் கடைசி உடன்பிறப்புகள் நம் அத்தனை பேருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இந்தித் திணிப்பு அல்ல, எந்தத் திணிப்பையும் தமிழ்நாட்டுக்குள்ளே நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.