தொடர் கனமழை எதிரொலியாக சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும். 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள அணைக்கட்டுகள், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23
அதிகாரிகளுடன் உதயநிதி ஆய்வு
இந்நிலையில் சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்யும் வகையில் ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அலைப்புகளையும் எடுத்து துணைமுதல்வர் பொதுமக்களுக்கு பதில் அளித்தார்.
33
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த உதயநிதி
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்களுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை ஆய்வு செய்தோம்.
Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினோம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.