
மாணவர்களும் ஆசிரியர்களும்
கல்வி தான் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கல்வி இல்லாத மனிதன் அடித்தளம் இல்லாத கட்டினம் போன்றவன். அந்த வகையில் கல்வி என்பது தற்போதைய காலத்தில் முக்கிய தேவையாக உள்ளது. எனவே மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.
எனவே ஆசிரியர்கள் தான் ஒரு மாணவனை சிறந்தா மாணவனாக மாற்றுவதில் முக்கிய வழிகாட்டியாக உள்ளனர். எனவே கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் கூடுதல் சுமைகளையும் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை
இதன் படி EMIS எனப்படும் கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் தரவுகள் பதிவீடு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்கள் கற்பிக்க முடியாமல் EMIS தரவுகள் பதிவு செய்வதிலையே காலம் முழுவதும் விரயம் ஆவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு எமிஸ் தரவு உள்ளீட்டு பணி
அதில், கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) தற்போதைய தரவு உள்ளீடு செயல்முறைகளை மதிப்பிடுவதற்கும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவு மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தரவு உள்ளீட்டு நடைமுறைகள் மற்றும் பயனர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு. EMIS-இல் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை எளிதாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே வேளையில், அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே வகையிலும், தரவு உள்ளீடு செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் சுமைகள் தளர்வு
பேணப்படும் ஆசிரியர் நிபுணத்துவ மேம்பாடு (TPD) பயிற்சியின் போது ஆசிரியர்களின் தரவு உள்ளீட்டை குறைப்பதற்காக, பயிற்சி வருகை. கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன. ATAL ஆய்வகம் தொகுதி பதிவு EMIS லிருந்து அகற்றப்படும்.
நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் சார்ந்த தொகுதிகள்: நிதிப் பதிவு. நிறுவனப் பதிவு, பள்ளி நன்கொடைப் பதிவு, தகவல் தொடர்புப் பதிவு, மனுக்கள் மற்றும் செயல்முறைப் பதிவு, உதவித்தொகை மற்றும் மாணவர் ஊக்கப் பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள்.
நூலக புத்தக விநியோக விவரம்: நூலக புத்தகப் பதிவுகளில் யார் எந்தெந்த புத்தகங்கள் உள்ளனர் மற்றும் தற்போதைய புத்தக இருப்பு ஆகியவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்தல் போதுமானதாகும்.
வாசிப்பு இயக்கம்:
எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர் தரநிலை விவரங்களிலிருந்தே தரவுகளைப் பெற்று வாசிப்பு இயக்கப் பதிவுகளுக்கு மாற்றப்படும். வாசிப்பு இயக்கத்திற்கான தனியான பதிவு மேற்கொள்ள வேண்டியதில்லை.
கலைத் திருவிழா:
வெற்றியாளர் பட்டியல்களை மட்டுமே பதிவு செய்ய நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்றோர் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.
விலையில்லா பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்:
பாடப்புத்தகங்களுக்கான Barcode அடிப்படையிலான கண்காணிப்பு, மாநில அளவில் இருந்து தலைமையாசிரியர்கள் வரை செயல்படுத்தப்படும். பெறப்பட்ட ஒட்டு மொத்தமாக விநியோகிக்கப்பட்ட, இருப்பு மற்றும் தேவைகள் ஆகிய விவரங்களை மட்டுமே பதிவிட்டால் போதுமானதாகும். மாணவர்கள் வாரியாக பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
குழுக்கள் மற்றும் மன்றங்கள்:
அனைத்து குழுக்கள் மற்றும் மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட வேண்டியதற்கு மாறாக இவை அனைத்தையும் House System என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக தனித்தனியாக மன்றங்கள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.
இடைநிற்றல் (Dropout) கண்காணிப்பு:
15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களப் பற்றிய விவரம் மட்டுமே பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
கால அட்டவணை மேலாண்மை:
கால அட்டவணை சார்ந்த உள்ளீடுகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்தால் போதுமானதாகும்.
பள்ளி சார்ந்த விவரங்கள்:
பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் ஒருங்கமைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. எனவே. தனித்தனி விவரங்கள் பதிவிட வேண்டியதில்லை. இந்த நடவடிக்கைகள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக தரவு உள்ளீடு சார்ந்த பணிச்சுமையை கணிசமாகக் குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த மாற்றங்கள் EMIS தரவு மேலாண்மை அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.