உள்ளாட்சி அமைப்புகளில் அதிரடி மாற்றம்.! இனி இவர்களும் கவுன்சிலராக நியமனம்- தமிழக அரசு அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Disabled persons appointment in local government bodies: மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 40%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கப்படுகிறது.
மேலும் தனிநபர் விபத்து நிவாரணமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஈமச்சடங்கு செலவிற்காக 2,000 ஆயிரம் இழப்பீடு, இயற்கை மரண உதவி 15,000 ரூபாய், திருமண உதவித்தொகை ரூ.2000, மகப்பேறு உதவி தொகை ரூ.6000, கல்வி உதவித்தொகை ரூ.1000 முதல் 4000 வரை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி, கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகர்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி,
ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்
பேரூராட்சிக்கு ஒரு மாற்றுத்திறனாளி என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வைத்து குழு அமைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2 மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்க சட்ட முன்வடிவு
நகர்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் முடியும் வகையில் இவர்கள் பதவியில் இருப்பார்கள். இந்த சட்டமுன் வடிவு சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதி நாளில் விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.