மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் திடீரென ஒழிக ஒழிக என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மீண்டும் சென்னை செல்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனும், சட்டக்கல்லூரி மாணவருமான அக்சய் என்பவர் திடீரென ஒழிக ஒழிக என கோஷம் எழுப்பினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் எம்எல்ஏ மகனின் வாயை பொத்திய நிலையில் காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
24
நீதிபதிக்கு எதிராக கோஷம்..
இதனிடையே தனது கோஷம் தொடர்பாக விளக்கம் அளித்த எம்எல்ஏ மகன் அக்சய், “ஒழிக ஒழிக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். தமிழக முதல்வர் அளித்த தைரியத்தில் தான் அப்படி சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் நாட்டின் குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல் தான் இந்த மாநிலத்தையும், இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்றும் குரலாக இருக்கிறது.
பாசிச மற்றும் தனது சொந்த கருத்துகளை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் எழுதியது போல் எனக்கு தோன்றியது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
34
அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவினர்..
ஆனால் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “பொதுமக்கள் மட்டுமல்ல; திமுக அரசின் கட்டுக்கடங்காத நடத்தைக்கும், நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்கும் எதிராக திமுக எம்எல்ஏவின் மகனும் குரல் எழுப்புகிறார். மதுரையில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏவின் மகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சிக்கும், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் விளக்கேற்ற நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததற்கும் எதிராகக் குரல் எழுப்புகிறார்.
எப்போதும் போல, இந்த அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களைப் போலவே, இந்த இளைஞரும் காவல்துறையினரால் விரைவாகக் கைது செய்யப்பட்டார். திமுகவில் உள்ளவர்களால் கூட இனி அமைதியாக இருக்க முடியாதபோது, பொதுமக்களின் பொறுமை எவ்வளவு ஆழமாக சோதிக்கப்பட்டுள்ளது என்பதைப் இது காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நீதிபதிக்கு எதிராக எம்எல்ஏ மகன் கருத்து தெரிவித்ததை அரசுக்கு எதிரானது போல் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.