EVKS Elangovan
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
EVKS Elangovan
நேரில் சென்ற முதல்வர்
இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் அவ்வபோது அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம், பின்னடைவு என்ற தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அவரை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
EVKS Elangovan
வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை
நுரையீரலில் பாதிப்பு இருந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் இளங்கோவனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் இளங்கோவன் கொண்டு வரப்பட்டதாகவும் மருத்துவர்கள் இன்று காலை தெரிவித்திருந்தனர்.
EVKS Elangovan
காலமானார்
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 10.12 மணி அளவில் உயிரிழந்ததாக கட்சியின் மாநில கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உறுதி படுத்தி உள்ளார். அவரது உடல் மருத்துவமனை அருகில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்படும் என்றும் பின்னர் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும் என்றும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
EVKS Elangovan
மகன் விட்டுச்சென்ற பொறுப்பில் EVKS
முன்னதாக 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திருமகனின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.