
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வேளாண் உழவர் நலத்துறையில் ஐந்து தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் 1,94,076 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட தரிசு நிலங்களை சாகுபடிக்கு உகந்ததாக மாற்றி, நீர் ஆதாரங்களை உருவாக்கி, மின்சாரம் வழங்கி, சிக்கனமாக நீரை பயன்படுத்திட சொட்டு நீர்பாசனக் கருவிகளை அமைத்து, நீண்ட நாட்கள் பயன்தரும் பழமரக்கன்றுகளை நடவு செய்து, நிலையான வருமானத்திற்கு வித்திட்ட "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பசுந்தாள் உரங்கள். வேப்ப மரம், நொச்சி, ஆடாதொடா கன்றுகள் வழங்கும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், காலநிலை மாற்றத்தினை எதிர்கொண்டு, குறைந்த நீரில்,
வெப்பத்தினை தாங்கி வளரும் சிறுதானியப் பயிர்களின் சாகுபடி மூலம் விவசாய வளர்ச்சியை நிலைப்படுத்திட தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி, உழவர்களின் வருமானத்தை பெருக்கிட வழிவகை செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களுடன். திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவர்களிடம் எடுத்து செல்வது மிகவும் அவசியமாகும் என்பதை உணர்ந்து, உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர். .
எனவே, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து. அவர்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை வழங்கிட புதிய தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கையில் "உழவர்களைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திருவாரூர் மாவட்டம். வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் "உழவர்களைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும். மேலும், இத்திட்டத்திற்கான முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும்.
இதன்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் அரசு நலத்திட்ட உதவிகள் அவர்களை விரைவாக சென்றடையும். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மொத்தம் மாதந்தோறும் 1540 கிராமங்களில் "உழவரைத் தேடி-வேளாண்மை-உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.