தமிழக அரசின் கல்விக்கான திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அரசு பணி தேர்வுக்கு தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறது. மேலும் UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்காக புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
சென்னை, கொளத்தூர், அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இணைந்து 2.85 கோடி ரூபாய் செலவில்
முதல்வர் படைப்பகம்
பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் "Co-working Space" மற்றும் மாணவர்களுக்கான "கல்வி மையம்" என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். முதல்வர் படைப்பகத்தில் UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இங்கு வந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
இடையூறுயின்றி படிக்க ஏற்பாடு
மேலும், மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 51 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இவ்விடம் அமையப் பெற்றுள்ளது.
அத்துடன், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும். ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பணி செய்வதற்காகவே ஒரு தளம்
அதுமட்டுமன்றி 3 கலந்தாய்வு கூடங்களும், அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும், ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து கலந்தாலோசனை மேற்கொள்ளும் வகையிலும். உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளமும், என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலேயே முதல் முறையாக கொளத்தூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் இத்தகைய சிறப்பு வாய்ந்த "முதல்வர் படைப்பகம்" உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.